சந்தேகநபருக்கு ரின்னர் பருக்கி சித்திரவதை செய்த யாழ்ப்பாணப் பொலிஸார்!

யாழ்ப்பாணப் பொலிஸாரால் ரின்னர் பருக்கி சித்திரவதை செய்யப்பட்ட சந்தேகநபர் சட்ட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார்.

அத்துடன் சந்தேகநபருக்கு எதிராக அபாயகர ஒளடதங்கள் சட்டத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அவரை வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணம் அரியாலை மாம்பழம் சந்தியைச் சேர்ந்த விக்டர் சுந்தர் (வயது-36) என்ற குடும்பத் தலைவர் யாழ்.பொலிஸாரால் நேற்று முன்தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

யாழ்.கல்வியங்காடு பகுதியில் கெமி குரூப்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தாக்கப்பட்ட நிலையில் வீதியில் அடிகாயங்களுடன் கடந்த டிசம்பர் 4 ஆம் திகதி மீட்கப்பட்டார். அந்த வழக்கில் விக்டர் சுந்தர் பொலிஸாராhல் தேடப்பட்டுள்ளார்.

இந் நிலையில்; விக்டர் சுந்தர் சிகை அலங்கரிப்பு நிலையத்திலிருந்த வேளை யாழ்.குற்றத் தடுப்புப் பொலிஸ் பிரிவின் உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஹர்ஷா என்பவரால் கைது செய்யப்பட்டு யாழ்.பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சந்தேகநபரின் மனைவி வேலைக்குச் சென்று வீடு திரும்பிய போது வீடு பூட்டப்பட்டதை அறிந்து தேடிய நிலையிலேயே கணவர் கைது செய்யப்பட்டு யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டமை தெரிய வந்தது.

பொலிஸ் நிலையத்திற்கு அவர் சென்றபோதும் கணவரை பார்க்க பொலிஸார் அனுமதிக்கவில்லை. கணவர் தாக்கப்படுவதை அறிந்த அவர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் முறைப்பாட்டை வழங்கினார்.

அது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.இணைப்பாளர் கனகராஜ் துரிதமாகச் செயற்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்குள் சென்றார்.

அங்கு சந்தேகநபர் கடுமையாகத் தாக்கப்பட்டு மயக்கமுற்ற நிலையில் காணப்பட்டுள்ளார். பொலிஸ் நிலையத்திலிருந்து அன்றைய தினம் மாலை 6 மணியளவில் சந்தேகநபரை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் சந்தேகநபருக்கு எதிராக இருவேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் யாழ்.நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் நேற்று இரண்டு வழக்குகளைத் தாக்கல் செய்தனர்.

ஆயிரத்து 800 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒரு வழக்கும், நபர் ஒருவரைத் தாக்கி காயம் விளைவித்த குற்றச்சாட்டில் மற்றுமொரு வழக்கையும் பொலிஸார் தாக்கல் செய்தனர்.

அவை தொடர்பில் சந்தேகநபர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் நேற்று வியாழக்கிழமை மாலை அங்கு சென்ற யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் விசாரணைகளை முன்னெடுத்தார்.

சந்தேகநபரை பொலிஸ் நிலையத்தில் தடுப்பில் வைத்து தாக்கவில்லை. அவர் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டார். சந்தேகநபருக்கு எதிராக வேறு பல வழக்குகள் இருந்தன. அவன் இதுவரை காலமும் தலைமறைவாகியிருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் மன்றுரைத்தனர்.

சந்தேகநபருக்கு பொலிஸ் தடுப்பில் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டுள்ளது. ரின்னர் பருக்கிவிட்டு தாக்கியுள்ளனர். என்று சந்தேக நபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வினோராஜ் மன்றுரைத்தார்.

இரு தரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த நீதிவான், சந்தேகநபருக்கு சித்திரவதை இடம்பெற்றுள்ளமை தொடர்பில் அவரை சட்ட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி மன்றுக்கு அறிக்கை சமர்பிக்குமாறு உத்தரவிட்டார்.

அத்துடன் சந்தேகநபருக்கு எதிரக அபாயகர ஒளடதங்கள் சட்டத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அவரை வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

Previous Post Next Post