கொரோனா அறிகுறி! ஏழு பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி!!

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஏழு பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த ஏழு பேரும் வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அனுராதபுரம் வைத்தியசாலையில் உள்ள கொரோனா பரிசோதணைக் கூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தகவல் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவச் சிப்பாய் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

மேலும் நேற்று திங்கட்கிழமை கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட தாவடிப் பகுதியினைச் சேர்ந்தவரின் வீட்டிற்கு 300 மீற்றர் தூரத்தில் உள்ள வீட்டில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் குறித்த வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.

நெடுந்தீவிற்கு வெளிநாட்டவர் ஒருவருடன் சென்று வந்த ஆணைக்கோட்டைப் பகுதியினைச் சேர்ந்த நபர் ஒருவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான சந்தேகத்துடன் வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

மேலும் உரும்பிராய் பகுதியினைச் சேர்ந்த பழ வியாபாரி ஒருவரும் மன்னார் மாவட்டத்தில் இருந்து இருவரும் நேற்று மாலை கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த 7 பேரும் வைத்திய சாலையில் உள்ள கொரோனா சிகிச்சை விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அனுராதபுரம் வைத்தியசாலையில் உள்ள கொரோனா வைரஸ் பரிசோதணைக் கூட்த்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

குறித்த பரிசோதனைக்காக முடிவுகள் இன்று இரவு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
Previous Post Next Post