முடங்குகிறது பிரான்ஸ்! வீடுகளை விட்டு வெளியே வந்தால் சிறை!!

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக பிரான்ஸ் இரண்டு வாரங்களுக்கு முழுமையாக முடக்கப்படும் என ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் மேலும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் உத்தரவிட்டுள்ளார். கட்டுப்பாடுகளை மீறி பொது வெளியில் நடமாடும் எவரும் 14 நாட்கள் சிறைவைக்கபடுவார்கள் எனவும் ஜனாதிபதியின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கையில் இராணுவத்தைக் களமிறக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு நகர்த்துவதற்கு உள்ளிட்ட பணிகளில் இராணுவம் களமிறக்கபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மூடல்களுக்கு மேலதிகமாக உணவகங்கள் மற்றும் மதுக்கடைகளை மூடியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று நாட்களுக்கு ஒருமுறை இரட்டிப்பாகி வருகிறது. இறப்புகள் அதிகமாகின்றன.

பிரான்ஸில் நேற்று திங்கட்கிழமை மாலை வரையான உத்தியோகபூா்வ தகவல்களின் பிரகாரம் கொரோனா தொற்றுக்குள்ளாகி 5400 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 127 போ் உயிரிழந்துள்ளனா்.

இந்நிலையில் வைரஸ் தொற்று பரம்பலைக் கட்டுப்படுத்த இவ்வாறான கடுமையான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன என ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்தார்.

இன்று செவ்வாய்க்கிழமை மதியம் (1100 ஜிஎம்டி) மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் வாங்குவது, வேலைக்குச் செல்வது, உடற்பயிற்சி செய்வது அல்லது மருத்துவ பராமரிப்பு ஆகியவற்றைத் தவிர தேவையற்று பொது வெளியில் நடமாடும் எவரும் கைது செய்யப்பட்டு இரு வாரங்கள் சிறைவைக்கபடுவார்கள் எனவும் ஜனாதிபதி கூறினார்.

நாங்கள் வேறொரு இராணுவத்துக்கோ அல்லது வேறு நாட்டிற்கோ எதிராகப் போராடவில்லை. கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் போராடுகிறோம். அந்த எதிரி மறைந்திருந்து எம்மை வேகமாகத் தாக்குகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை மக்களை வீடுகளுக்குள் முடக்கும் நடவடிக்கைகளைக் கண்காணிக்க சுமார் ஒரு இலட்சம் பொலிஸார் நிறுத்தப்படுவார்கள் என பிரான்ஸ் உள்துறை அமைச்சர் கிறிஸ்டோஃப் காஸ்டனர் தெரிவித்தார்.

சோதனைச் சாவடிகள் நாடு தழுவிய அளவில் அமைக்கப்படும். வீதிளில் பயணம் செய்பவர்கள் அச்சிடப்பட்ட அமைச்சக ஆவணத்தில் தங்கள் பயணத்துக்கான காரணங்களைக் குறிப்பிட வேண்டும்.

முந்தைய எச்சரிக்கைகளை பலர் புறக்கணித்து, பூங்காக்களிலும், தெருவோரங்களிலும் வார இறுதியில் ஒன்றிணைந்து தங்கள் சொந்த ஆரோக்கியத்தையும் மற்றவர்களின் நல்வாழ்வையும் பணயம் வைத்துள்ளனர். இவற்றைத் தடுக்க கடுமையான நடவடிக்கை தேவை என்று மக்ரோன் கூறினார்.
Previous Post Next Post