அல்லைப்பிட்டியில் தற்கொலை செய்த முன்னாள் போராளியின் வாழ்க்கைப் பயணம் இது..!

யாழ்ப்பாணம் உரும்பிராயைப் பிறப்பிடமாகவும் அல்லைப்பிட்டி 03 ஆம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வில்லபவராசா குருபவராசா நேற்று (13) தூக்கில் தொங்கி தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.

இவர் மண்டைதீவுப் பகுதியைச் சேர்ந்த புண்ணியமூர்த்தியின் மகளைத் திருமணம் செய்துள்ளதுடன், இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

குரு அல்லது ராஜ் என அழைக்கப்படும் அல்லைப்பிட்டியில் வசித்து வந்த ஒருவரது கதை.....!

இலங்கையில் யுத்தம் நிறைவடைந்த பிற்பாடு இடப்பெயர்வு, புனர்வாழ்வு, விடுவிப்பு என்பன நிகந்த பிற்பாடு அல்லைப்பிட்டி கிராமத்துக்கு ஒரு கால் இழந்த ஒருவரது வருகை (2009).....,

சமூக மட்ட அமைப்புகள் அல்லைப்பிட்டி பாடசாலை முன்பக்கத்தில் ராஜ் பவான் எனும் பெயரில் சிறிய தேநீர் கடை ஒன்றினை அமைத்து கொடுத்ததிலிருந்து அவரது வாழ்வாதாரம் அல்லைப்பிட்டியில் ஆரம்பமானது.

மூன்று பிள்ளைகளின் தந்தையாக கால் இழந்தவர் எனும் குறை உள்ளவர் என்பதை எண்ணாமல் உழைக்க வேண்டும் என்ற திடமான மன நிலையுடன் தனது வாழ்வை ஆரம்பித்து இருந்தார்.

படிப்படியாக வீட்டில் மாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு என தனது வாழ்க்கை தரத்தினை மேம்படுத்த அயராது உழைத்த வண்ணம் இருந்தார். இவ்வாறு காலம் சென்று கொண்டிருக்க, அல்லைப்பிட்டி எனும் ஊருக்கும் இவருக்கும் திருமணம் முடித்த பந்தத்தை தவிர வேறு எந்த தொடர்பும் இருக்கவில்லை.

இருந்த போதும் தனது சொந்த ஊர் போலவே அவரது செயற்பாடுகள் காணபட்டது.  புலம்பெயர் தேசத்தில் உள்ள  இணையதளம் ஒன்றுக்கு செய்தி சேகரிப்பாளராக, புகைப்பட கலைஞராக செயற்பட்டு வந்ததுடன் அவ் அமைப்பு மேற்கொண்ட சமூக பணியிலும் தன்னை அர்ப்பணித்து கொண்டார்.

சமூக சேவை ஆற்றுவதில் முன் நின்று செயற்படும் வகையில் மங்கல, அமங்கல நிகழ்வுகள் எங்கும் இவரது குரல் கேட்காத இடம் இல்லை. கோவில்களிலும் இவரின் பணிகள் இல்லாமல் இல்லை.

அல்லைப்பிட்டி குருவ தெரியுமா என கேட்டால் இல்லை என்று சொல்லுவதில்லை பெரும்பாலும் எதோ ஒரு விதத்தில் தெரிந்து இருக்கும்.

திருமண விழா என்றால் வாழ்த்து பா கொடுக்க வேண்டும், மரண நிகழ்வு என்றால் பனர் அடிக்க வேண்டும், நோடீஸ் கொடுக்க வேண்டும் என்பதில் குறியாக நிற்பார்.

தன்னை மதிப்பவர்,மதிக்காதவர் எவர் என்றாலும் ஏதும் என்றால் முன்னுக்கு நிற்பார். பாடசாலை அபிவிருத்தி, சமூக அபிவிருத்தி என பல சமூக சேவை மனப்பாங்கு கொண்டவர். தன்னிடம் இல்லை என்றாலும் முடிந்த வரை உதவி செய்ய கூடிய நபர்.

என்னுடன் தொடர்புடைய நினைவுகள்,

யாழ்ப்பாணத்தில் இருந்து எமது சொந்த ஊருக்கு திரும்பி வந்திருந்த காலம். எமது வீட்டுக்கு முன் வீட்டில்தான் குரு அண்ணா வசித்து வந்தவர். ஆரம்பத்தில் என்னுடன் பழக்கம் இல்லை. எனது அக்காவின் மரண வீட்டிலேயே என்னுடன் பழக்கம் கொண்டவர்.

சதுரங்கம் விளையாடுவதில் பலே கில்லாடி. ஒரு முறை தோற்கடிக்க முடியாதா என்று ஏங்கி இருகின்றேன்.

இதுபோக நான் எனது வீட்டில் இருந்து அல்லைப்பிட்டி சந்திக்கு நடந்து செல்லும் போது, தனக்கு வேறு அலுவல்கள் இருந்தாலும் என்னை மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்று விடுவதுண்டு.

கல்யாண வீடு, சாமத்திய வீடு என்றால் அந் நிகழ்வுக்கு புகைப்படம் எடுப்பவர்களிடம் கேட்டு ஒரு படத்தினை பெற்று என்னிடம் கொண்டு வந்து  frame செய்து தர சொல்லி கேட்டுக் கொள்வாா்.

வேலணை பிரதேச சபையில் வேலையினை பெற்று கொண்ட இவர் பிரதேச சட்ட திட்டங்களை அமுல்படுத்த போய் சிலருடன் முரண்பட்டதுண்டு. கடன் கொடுத்தல், வாங்குதல் போன்ற செயற்பாடுகள் இருந்தாலும் எல்லாவற்றையும் வெட்டி ஆளும் திறமை கொண்டவர்.

சில வேலைகள் குருவிடம் சென்றால் முடிக்கலாம் என்ற வகையிலும் வாழ்ந்த ஒருவர்.

சில இடங்களில் சிலருக்கு ஆதரவாக பேசி அடுத்தவருடன் முரண்பட்டதும் உண்டு. முரண்பட்டாலும் மீண்டும் சென்று பகையை வைத்திருக்காது பேச கூடியவர்.

கால் ஒன்றை இழந்து இருந்தாலும் மோட்டர் சைக்கில் சாகசம் நிகழ்த்தி காட்டுவதில் வல்லமை உள்ளவர். எந்த வேலையையும் முடியாது என சொல்லாமல் இறங்கி நின்று செய்ய கூடியவர்.

இறப்பதற்கு முதல் நாள் எமது வீட்டுக்கு வருகை தந்து தனது குடும்பம் மற்றும் எதிர்காலம் தொடர்பில் கதைத்து கொண்டு இருந்தவர்.

இறந்த அன்று காலையில் தனது மாடுகளில் இருந்து பால் கறந்து கொண்டு சென்று பால் கொடுக்கும் வீடுகளுக்கு கொடுத்து விட்டு எமது வீட்டிற்கு வந்து பிரதேச சபையில் இருந்து கொடுக்கபட்ட கடிதத்துக்கு அமைய TO வருவார் என கூறி அந்த விடையத்தை தான் முடித்து தருவதாக கூறி சென்றவர்.

இருபத்தைந்து நிமிடங்களின் பின்னர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கபட்டார்.

மனைவி, மூன்று பிள்ளைகள் எதிர்காலம் எதையும் யோசிக்கவில்லை? வீடு, வளவு, மாடுகள், நகை அனைத்தும் இருந்தும் கடன் என ஊர் கூறும் விதத்தில் மீளா கடன் காரணம் என இது நிகழ்ந்தது ?

எனது கருத்து படி அவர் தற்கொலை செய்ய கூடியவர் இல்லை. மரண விசாரணை அறிக்கை, உடற்கூற்று பரிசோதனை முடிவு தற்கொலை என்று கூறுகின்றது.

முன்னாள் போராளியான இவர் புலிகள் இயக்கத்தில் உந்துருளி படைபிரிவில் முக்கிய பதவி வகித்தவர். தலைமை மற்றும் தளபதிகளின் நெருங்கிய நபருமாவர்.

கால் இல்லை என பரிதாபம் தேடவும் இல்லை, சொந்த உழைப்பில் சொந்த காலில் வாழ நினைத்தவர் - வாழ்ந்தவர். ஏற்றுக்கொள்ள கூடிய சம்பவம் இல்லை. ஏனோ மனம் தவிக்கிறதே. உங்களின் ஆத்மா சாந்தியடையட்டும். குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

 R.Raj Baarathy
14.03.2020
 

Previous Post Next Post