பக்கத்து வீட்டு நாயைக் கட்டி வைத்த இளைஞன் அடித்துக் கொலை! 12 பேர் கைது!!

முல்லைத்தீவு குமுழமுனைப் பகுதியில் அயலவர்களால் இளைஞன் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் குமுழமுனைப் பகுதியைச் சேர்ந்த இராசலிங்கம் ரமேஷ் (வயது-26) என்ற இளைஞனே இவ்வாறு அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பக்கத்து வீட்டு நாயொன்று குறித்த இளைஞனின் வீட்டுக்குச் சென்று சாப்பாட்டைத் திருடிச் சென்றுள்ளது. அதனால் குறித்த இளைஞன் நாயினைக் கட்டி வைத்து அடித்துத் துன்புறுத்தியுள்ளான். அதனைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர், இளைஞனுடன் கருத்து முரண்பாட்டில் ஈடுபட, அது பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.

இவ் மோதலில் படுகாயமடைந்த குறித்த இளைஞன் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுப் பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இந் நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞனின் மரணத்தைத் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகத்தின் பேரில் மூன்று குடும்பத்தைச் சேர்ந்த 12 பேரைக் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
Previous Post Next Post