யாழ்.போதனா வைத்தியசாலையின் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டது - மருத்துவர் சத்தியமூர்த்தி! (படங்கள்)

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா தொற்று அறிகுறிகளுடன் வருபவர்களை அனுமதிக்கவும், பரிசோதிக்கவும், சிகிச்சை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அத்துடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் பல சேவைகளைச் செயற்படுத்துவதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பிற நோய்களுக்குச் சிகிச்சைக்கு வருபவர்கள் என அவர்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை சமூகத்தில் அதிகரிக்கும் பட்சத்தில் அவர்களுக்கான சிகிச்சையை வழங்குவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இது தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கும், செயற்படுத்துவதற்கும் ஒரு ஆலோசனைக்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. தொற்றுப்பரவலை தடுத்தல், சுய பாதுகாப்பு உபகரணங்களின் பயன்பாடு போன்றவற்றில் வைத்தியசாலை ஊழியர்களுக்கு பயிற்சியும் வழங்கப்பட்டு வருகின்றது.

கொரோனா அபாய நிலைமையிலும் அத்தியாவசிய சிகிச்சைகளும், தீவிரமான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான சிகிச்சைகளும் நடைபெற்று வருகிறது.

யாழ் மருத்துவபீட மாணவர்களின உதவியுடன் தொற்றா நோய்களுக்கான சிகிச்சையில் இருக்கும் நோயாளிகள் தமக்கு தேவையான மருந்து மாத்திரைகளை தொலைபேசி அழைப்பின் மூலம் நேரடியாக வீட்டில் அல்லது அருகிலுள்ள வைத்தியசாலையில் பெற்றுக்கொள்ளக்கூடிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

இவ்வனர்த்த நிலைமையில் வைத்தியசாலை ஊழியர்களின் நலனை உறுதிப்படுத்தும் நோக்கில் போக்குவரத்து வசதிகள், உணவுப் பொருட்கள் வழங்கல், தங்குமிட வசதிகள் ஆகியன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறாக இந்த கடினமான சூழ்நிலையிலும் அனைவரும் முழு வினைத் திறனுடன் செயற்படுவதற்கான வழிவகைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று அவா் தெரிவித்தாா்.





Previous Post Next Post