யாழில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று!

யாழ்ப்பாணத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவருக்குக் கொரோனாத் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளா் த.சத்தியமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

பலாலிப் பகுதியில் தற்போது இருக்கின்ற குறித்த அரியாலை மதகுருவோடு கூடியளவு தொடர்புகளைப் பேணிய மேலும் 10 பேருக்கான பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டன.

அவற்றுக்கான ஆய்வுகூடப் பரிசோதனை முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளது. அவர்களில் மூவருக்கு தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்படி மூவரும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள். தாய் , மகன்  மற்றும் மகள் ஆகியோருக்கே கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அரியாலை முள்ளி வீதியைச் சேர்ந்தவர்கள். தற்போது அவர்களுடைய உடல்நிலை சாதாரணமாகவே காணப்படுகின்றது.

இருப்பினும் மேலதிக பராமரிப்புக்கும், சிகிச்சைக்கும், கண்காணிப்புக்கும் நாளை அம்புலன்ஸ் வண்டியினூடாக வெலிகந்த விசேட வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட இருக்கின்றனர் என்று மருத்துவா் த.சத்தியமூா்த்தி தெரிவித்தாா்.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post