கொரோனா விவகாரம்! இத்தாலியிடம் மன்னிப்புக் கோரியது ஐரோப்பிய ஒன்றியம்!!

உலக நாடுகளில் அதி வேகமாகப் பரவி இலட்சக் கணக்கான மக்களைக் கொன்று குவித்து வரும் கொரோனா வைரஸின் தாக்கத்தில் இத்தாலியும் சிக்கி அதிக இழப்புக்களைச் சந்தித்திருந்தது.

இந் நிலையில், கொரோனா பாதிப்புகளால் நிலைகுலைந்துள்ள இத்தாலிக்கு ஆரம்ப காலத்தில் உதவ முடியாமல் போனதற்கு இதயப்பூர்வமாக மன்னிப்பை கேட்டுக்கொள்வதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

சீனாவில் வுஹான் நகரத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக அங்கிருந்து பரவி ஐரோப்பாவில் நிலைகொண்டது. இதில் ஐரோப்பிய கண்டத்திலேயே அதிகம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இத்தாலி முதன்மையாக உள்ளது.

நோய் பரவலின் ஆரம்ப கட்டத்தில் கடுமையான பாதிப்புகளுக்குள்ளான இத்தாலியில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பாதிப்புகள் பதிவான வண்ணம் இருந்தன.

மேலும் அதிக அளவில் பரவியதையடுத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான படுக்கை வசதிகள் மற்றும் மருத்துவ உபரகணங்கள் இல்லாமல் இத்தாலி தடுமாறியது.

இந்த காலகட்டங்களில் எஞ்சிய ஐரோப்பிய நாடுகளிலும் வைரஸ் தொற்று அதிகரித்து வந்ததால் இத்தாலிக்கு தேவையான உதவிகளை ஐரோப்பிய ஒன்றியத்தால் செய்ய இயலாமல்போனது.

இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் தற்போது இத்தாலியிடம் மன்னிப்பு கோரியுள்ளது. இது குறித்து ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அதன் தலைவர் அர்சுலா வாண்டர் லென், கொரோனா பாதிப்புக்குள்ளான இத்தாலிக்கு ஆரம்ப காலகட்டங்களில் நம்மால் உதவி செய்ய முடியாமல் போனது வருத்தமளிப்பதாகவும் இந்த சம்பவத்துக்கு இத்தாலியிடம் இதயப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.

இதுவரை கொரோனா தொற்றால் இத்தாலியில் 1,65,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 21,645 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post