கொரோனா… சாவுகள் ஒரு இலட்சம்! இலங்கை மக்களைப் பின்பற்றுமா சர்வதேசம்?

கொரோனாத் தொற்று உலகம் முழுவதையும் உலுக்கி வருகின்றது. மருத்துவத்திலும் விஞ்ஞானத்திலும் உச்சம் பெற்ற நாடுகள் கூட கொரோனாவுக்கு ஈடுகொடுக்க முடியாதளவில் திண்டாடிப் போயுள்ளன.

இதற்குக் காரணம் கொரோனாத் தொற்றைத் தடுப்பது என்பதற்குள் வாழ்வியல் நடைமுறைகளும் பழக்க வழக்கங்களும் அடங்கியுள்ளன.

பொதுவில் மேற்குலக நாடுகள் ஒழுக்க நெறிகளையும் குடும்ப வாழ்வியல் முறைகளையும் மனித சுதந்திரத்திற்கான தடை என்றே கருதின. இதனால் அந் நாடுகளில் சுய கட்டுப்பாடுகளும் தனி மனித ஒழுக்கங்களும் இல் வாழ்க்கை முறைகளும் முற்றாகச் சிதைந்து போய், இரவு நேர விடுதிகளில் களியாட்டங்களும், இரவு நேர விருந்துகளும், ஆண், பெண் என்ற பேதமை இல்லாத மதுப் பாவனைகளும், புகைத்தலுமே அவர்களின் வாழ்க்கையாயிற்று.

இந் நிலையில் மனிதரிடம் இருந்து மனிதருக்குச் சுவாசம், தொடுகை என பரவக் கூடிய கொரோனா மேற்குலகை சங்காரம் செய்கின்றது. இது தவிர, சீன தேசத்தில் கொரோனாத் தொற்று ஏற்பட்டு விட்டது என்றவுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டியது கட்டாயமாக இருந்தபோதிலும் விதிவசம் போல் உலக நாடுகள் அதுவிடயத்தில் அசமந்தமாகவே இருந்து விட்டன.

இதனால் இன்று ஒரு இலட்சம் பேர் கொரோனா நோய்க்குப் பலியாகி விட்ட பெருந்துயரை இந்த உலகம் அனுபவித்து நிற்கின்றது. இவற்றுடன் ஒப்பிடுகையில் இலங்கை எடுத்த தீர்மானங்களும், நடவடிக்கைகளும் உயர்வானவை என்பதை ஏற்றுத்தான் ஆக வேண்டும்.

இறை வழிபாட்டையும், இறை நம்பிக்கையையும் மனித வாழ்வின் ஒழுக்கமாகக் கொண்டுள்ள இலங்கை மக்கள் கொரோனாத் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாப்பதில் வெற்றி பெறுவர் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இந்த நம்பிக்கை மனித அவலத்தைத் தடுக்கும் என்பது மட்டுமன்றி, குடும்ப ஒழுங்கமைப்பைக் கடைப்பிடிக்கின்ற இலங்கை போன்ற நாடுகளைச் சேர்ந்த மக்கள் குடும்பத்தின் வழி நின்று பின்பற்றுகின்ற இல்லறத்தை உலகம் முழுவதும் பின்பற்ற வேண்டும் என்ற ஆலோசனைகளும் அறிவுறுத்தல்களும் மேலெழுவதற்கான சந்தர்ப்பங்களும் உருவாகியுள்ளன.

ஆகையால், இல்லறம் எனும் பெரும் அறம் எங்கும் பரவி இந்த உலகம் தெய்வீக வாழ்வு வாழ்வதற்கு நாம் அனைவரும் உதவ வேண்டும்.

Previous Post Next Post