"என் கண் முன் சிதறிய 16 உடல்கள்... என்னால் மறக்கவே முடியாது" உயிர் தப்பியவரின் கண்ணீர் வாக்குமூலம்!

"எல்லாம் சில வினாடிகளில் நடந்து முடிந்துவிட்டன. என் கண்முன்னே 16 பேரின் உடல்களும் சிதறி, தூக்கி எறியப்பட்ட காட்சியை என்னால் மறக்க முடியாது" என்று அவுரங்காபாத்தில் நேற்று நடந்த சரக்கு ரயில் விபத்தில் உயிர் தப்பியவர் கண்ணீருடன் பேட்டி அளித்துள்ளார்.

மகாராஷ்டிராவிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு நடந்தே ரயில் இருப்புப்பாதை வழியாக நேற்று சென்றனர்.

அவுரங்காபாத்-ஜல்னா ரயில் பாதையில் நேற்று நடந்துவந்தபோது உடல் அசதி காரணமாக ரயில் தண்டவாளத்தில் படுத்து தொழிலாளர்கள் பலர் தூங்கிவிட்டனர்.

அப்போது காலை 5.30 மணி அளவில் அந்த வழியே வந்த சரக்கு ரயில் தண்டவாளத்தில் தொழிலாளர்கள் படுத்து உறங்கியவர்கள் மீதி ஏறியது. இதில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ரயில் தண்டவாளத்தில் தொழிலாளர்கள் உறங்கியதைப் பார்த்த ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்த முயன்று, தொடர்ந்து ஒலி எழுப்பியும் அவர்கள் எழுந்துகொள்ளாததால் ரயில் மோதியது.

இந்தச் சம்பவத்தில் சிவமான் சிங் என்ற மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளி தண்டவாளத்திலிருந்து வெகுதொலைவில் ஒதுங்கிப் படுத்திருந்ததால் உயிர் தப்பினார்.

ரயில் வரும் சத்தத்தைக் கேட்டு தன்னுடன் வந்தவர்களை எழுப்பச் சத்தமிட்டும் அவர்கள் எழுந்திருக்காததால் கண்ணிமைக்கும் நேரத்தில் ரயில் மோதியது. இப்போது அந்த 16 பேரின் உடல்களுடன், சிவமான் சிங்கும் மத்தியப் பிரதேசம் செல்ல ரயிலில் பயணித்து வருகிறார்.

இந்த விபத்து குறித்து சிவமான் சிங் கண்ணீருடன் கூறியதாவது:

”ஜல்னாவில் உள்ள உருக்காலையில் நாங்கள் அனைவரும் வேலை செய்தோம். கரோனா லாக்டவுனால் வேலையில்லாததால் மத்தியப் பிரதேசத்தில் உள்ள எங்கள் சொந்த ஊருக்கு நடந்தே செல்ல முடிவு செய்தோம்.

இதற்காக ரயில் இருப்புப்பாதை வழியாக 36 கி.மீ. நடந்து கர்நாட் அருகே வந்து சேர்ந்தோம். அப்போது என் முன்னால் சென்றவர்கள் வேகமாகச் சென்று தண்டவாளத்தில் அமர்ந்துவிட்டனர். எனக்குக் கால் வலி எடுத்ததால், தண்டவாளத்தில் இருந்து இறங்கி தரைப்பகுதியில் படுத்துவிட்டேன்.  என்னுடன் வந்தவர்களும் தண்டவாளத்தில் அமர்ந்தவாறே அசதியில் படுத்துத் தூங்கிவிட்டார்கள்.

அதிகாலை 5 மணிக்கு இருக்கும் என நினைக்கிறேன். வெகு தொலைவில் ரயில் வரும் சத்தம் கேட்டது. என்னால் எழுந்து நடக்க முடியாததால் நான் சத்தமிட்டு அனைவரையும் எழுப்ப முயன்றேன். ஆனால் உடல் அசதியால் அனைவரும் அயர்ந்து தூங்கிவிட்டனர். நான் பலமுறை சத்தமிட்டும் அவர்கள் எழுந்திருக்கவில்லை.

அடுத்த சில வினாடிகளில் ரயில் 16 பேரின் மீதும் ஏறி உடல்கள் சிதறியதைப் பார்த்த காட்சியை என்னால் மறக்க முடியாது. எல்லாமே கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்துவிட்டது. அந்தக் காட்சி என்னை மிகவும் வேதனைப்படுத்துகிறது. என்னால் இன்னும் கண் அயர்ந்து தூங்க முடியவில்லை. கண்ணை மூடினாலே அந்தக் காட்சிதான் கண்முன் வருகிறது.

இந்தச் சம்பவத்தைப் பார்த்த எனது குடும்பத்தினர் என்னைத் தொடர்பு கொள்ள பலமுறை முயன்றனர். என்னுடைய செல்போனில் சார்ஜ் இல்லாததால் அவர்களைத் தொடர்பு கொள்ளமுடியவில்லை.

விபத்து நடந்த பின் அதிகாரிகளுடன் சென்று உடலை அடையாளம் காண்பித்து அவர்களின் கேள்விக்குப் பதில் அளிப்பதிலேயே நேரம் சென்றது. நாங்கள் சொந்த மாநிலம் செல்வதற்காக மத்தியப் பிரதேச அரசிடம் பாஸ் விண்ணப்பித்தும் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை”. இவ்வாறு சிவமான் சிங் தெரிவித்தார்.
Previous Post Next Post