“எனக்கு வாக்களிக்க வேண்டாம்” -சுமந்திரன் வேண்டுகோள்!

மாற்று அணி என தம்மை தெரிவிப்பவர்கள் குறைந்தது ஐந்து ஆசனங்களையாவது பெற முடியுமா? அவ்வாறு மாற்று அணி என்று குறிப்பிடுபவர்கள் தமிழ் மக்களை சின்னாபின்னமாக்கி சிதைக்கின்றவர்கள்” இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

“நான் வன்முறைகளை விரும்பாதவன். வன்முறைகளை மக்கள் விரும்பினால் எனக்கு வாக்களிக்க வேண்டாம்” என்றும் அவர்வலியுறுத்தினார்.

வேட்பாளர்களை நிர்வாகிகளுக்கு அறிமுகப்படுத்தும் கூட்டம் இன்று பிற்பகல் 3:30 வடமராட்சி நெல்லியடி மாலுசந்தி பிள்ளையார் கல்யாண மண்டபத்தில் உடுப்பிட்டி தொகுதி தலைவர் ப.சுரேந்திரன் மற்றும் பருதித்துறை தொகுதி உப தலைவர் ச.சுகிர்தன் ஆகியோர் தலமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது;


நாங்கள் ஒரு அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்று முழுமையாக உழைத்தோம். அந்தத் தீர்வை ஒட்டு மொத்த சிங்கள மக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால் சிங்கள மக்களுக்கு எமது நியாயப்பாடுகளை தெளிவுபடுத்த வேண்டும்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ் மக்கள் கேட்பது நியாயம்தானே என சிங்கள மக்கள் உணரும் அளவிக்கு தலைவர் சம்மந்தன் ஐயா எதிர்கட்சி தலைவராக இருக்கின்ற காலத்தில் செயற்பட்டார்.

அண்மையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று கேள்வியை ஒன்றைக் கேட்டது. சுமந்திரன் மட்டும்தான் சிங்கள மக்களிடம் தமது கருத்துக்களை சொல்கிறார். உங்கள் கட்சி சார்பில் ஏன் இதனை செய்யவில்லை என்று அந்தக் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம், “தனக்கு மூன்று மொழிகளும் தெரியும், தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்றபோது அதனை செய்திருக்கின்றோம். தற்போது எமது கட்சியில் சட்டத்தரணி காண்டீபன் இருக்கின்றார். அவர் அதனை செய்வார்.

ஆயுதம் ஏந்திப் போராடாத நான் (சுமந்திரன்) அதனை சொல்லி வாக்கை பெறுவது அவர்களது தியாகத்தையும் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் செயல் என்றும் மக்களுக்கு தீர்வு வேண்டும் என்றால் இங்கே பேசுவதை சிங்கள மக்கள் மத்தியிலும் பேச வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் தமிழ் அரசு கட்சி வெட்பாளர்கள் திருமதி சசிகலா ரவிராஜ், சி.சிறீதரன், த.தபேந்திரன், ஈ.சரவணபவன், மாவை சேனாதிராசா, இமானுவேல் ஆனல்ட், எம்.ஏ.சுமந்திரன், பருத்தித்துறை, உடுப்பிட்டி தொகுதி தமிழரசு கட்சி நிர்வாகிகள் செயற்பாட்டாளர்கள், பருத்தித்துறை பிரதேச சபை தலைவர் ச.அரியகுமார், கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் ஐங்கரன், பருத்தித்துறை நகரசபை தவிசாளர் இருதயராசா என சுமார் 100 பேர் வரை கலந்து கொண்டிருந்தனர்.
Previous Post Next Post