பிரான்ஸின் புதிய பிரதமரை அறிவித்தார் ஜனாதிபதி! (வீடியோ)

பிரான்ஸ் பிரதமர் எத்துவார் பிலிப் (Edouard Philippe) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளாா்.  ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் அரசாங்கத்திற்கு மூன்று ஆண்டுகள் தலைமை தாங்கிய பின்னர் தனது ராஜினாமா கடிதத்தை, இன்று வெள்ளிக்கிழமை (03/07/2020) காலை பிரதமர் எத்துவார் பிலிப், ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளார்.

இந்த கோரிக்கையை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் ஏற்றுக்கொண்டதாக, எலிசே மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, இன்று காலை 10:00 மணிக்கு இடம்பெறவிருந்த அமைச்சர்களுக்கிடையேயான சந்திப்பு இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் பிலிப், ஜனாதிபதியை விட மிகவும் பிரபலமானவராகக் கருதப்பட்டாலும், ஆளும் லா ரெபுப்லிக் என் மார்ச்சே வார இறுதியில் உள்ளூர் தேர்தல் முடிவுகளை மோசமாகக் கொண்டிருந்தது.

இந்த பின்னணியில் மக்ரோன் புதிய அணியைத் திட்டமிட்டதால், பிரதமர் எத்துவார் பிலிப் தானே முன்வந்து பதவியை இராஜினாமா செய்துள்ளார். எனினும், அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுபவை வேறு...

கடந்த வாரம் நோர்மென்டியின் Le Havre நகர மேயராக தெரிவாகி பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்த பிலிப், மேயர் பதவியை ஏற்று நகர மக்களுக்கு சேவை செய்வதுதான் தனது விருப்பம் என்று கூறியிருந்தார்.


எனினும் ஜனாதிபதி மக்ரோனுக்கும் அவருக்கும் இடையே நிலவிய முரண்பாடுகள் காரணமாகவே பிரதமர் பதவியில் நீடிப்பதற்கு அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று அரசியல் மட்டங்களில் கருத்து நிலவுகின்றது.

பிரதமர் பிலிப்பின் செல்வாக்கு கொரோனா வைரஸ் நெருக்கடி காலத்தில் தொடர்ச்சியாக அதிகரித்து வந்ததை கணிப்புகள் வெளிப்படுத்தி இருந்தன. கடைசியாக வெளியான கருத்துக் கணிப்புகளின்படி 57 வீதமான பிரெஞ்சு மக்கள் எத்துவா பிலிப் பிரதமர் பதவியில் தொடர வேண்டும் என்ற விருப்பத்தை வெளியிட்டிருந்தனர்.

இந் நிலையில் நாட்டின் புதிய பிரதமரினை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சர்கோஷியுடன் இணைந்து பணியாற்றியிருந்த Jean Castex என்பவரை நாட்டின் புதிய பிரதமராக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார்.

இவர் Prades (Pyrénées-Orientales) நகரின் நகர முதல்வராகவும் பணியாற்றியுள்ளார். எத்துவார் பிரதமர் பிரதமர் பதவியில் இருந்து விலகிக் கொண்டதும், அவருக்கு பதிலாக இவர் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அரசியல் அரங்கில் பெரிதும் அறியப்படாதவர் Jean Castex. ஆனால் கொரோனா பொதுமுடக்கத்தில் இருந்து நாட்டை படிப்படியாக விடுவிக்கும் திட்டத்தை தயாரித்து அதனை நடைமுறைப்படுத்தியதில் பெரும் பங்கை வகித்துச் செல்வாக்குப் பெற்றவர்.

இதனால் அரசாங்க வட்டாரங்களில் "Mr. deconfinement" என அழைக்கப்படுபவர். தேசிய விளையாட்டு குழுமத்தில் 2019 ஆம் ஆண்டில் இருந்து முக்கிய பதவியில் இருக்கும் இவர், 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த முனைப்புடன் செயற்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Previous Post Next Post