எப்படி தப்பினார் கொரோனா நோயாளி? சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்!

கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த கொரோனா நோயாளி சினிமா பாணியில் தப்பிச் சென்றமை தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

குறித்த நோயாளி அறையொன்றில் தனிமைப்படுத்தப்பட்டநிலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.இதன்போது அறையில் இருந்த தும்புத்தடியை கையிலெடுத்த அவர் தான் அணிந்திருந்த ஆடையை தும்புத்தடியில் சுற்றி கட்டிலில் நோயாளி ஒருவர் படுத்திருப்பது போல் வைத்துள்ளார்.

பின்னர் அந்த அறையில் இருந்த ஜன்னல் ஒன்றை அகற்றி அதன்மூலம் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை தப்பிச் சென்ற குறித்த நோயாளி மீளவும் பகீரத தேடுதலின் பின்னர் பிடிக்கப்பட்டார். இதேவேளை தப்பிச் சென்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா நோயாளி கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் போதைவஸ்துக்கு அடிமையானவர் என்ற காரணத்தினால் கந்தகாடு போதைவஸ்து புனர்வாழ்வு நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே கொரோனா தொற்றுக்கு உள்ளாகி அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
Previous Post Next Post