பாடசாலைகளில் அனைத்து வகுப்புகளும் ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு! (சுற்றுநிருபம் இணைப்பு)

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் எதிர்வரும் ஆகஸ்ட் 10ஆம் திகதி கல்விச்செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் சுற்றுநிருபங்களும் அனுப்பப்பட்டுள்ளன.

இதன்படி தரம் ஒன்று முதல் 13 ஆம் தரம் வரைக்குமான அனைத்து வகுப்புக்களும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதில் தரம் ஒன்று முதல் 13 வரையிலான தரங்களைக்கொண்ட பாடசாலைகளில் 200 மாணவர்களுக்கு குறைவாக இருந்தால், அந்தப் பாடசாலைகளை காலை 7.30 ஆரம்பித்து பிற்பகல் 1.30க்கு நிறைவுறுத்த முடியும்.

கஸ்டப்பிரதேச பாடசாலைகள், மாகாண கல்விப் பணிப்பாளர்களின் அனுமதியுடன் காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு நிறைவுறுத்தப்படும்.

அத்துடன் தரம் 10,11,12,13 ஐ கொண்ட பாடசாலைகளில் 200 மாணவர்களுக்கு அதிகமாக இருந்தால் பிற்பகல் 3.30 வரை பாடசாலைகளை நடத்தி செல்லலாம். கஷ்டப்பிரதேசங்களில் அரை மணித்தியாலயத்தால் தாமதித்து ஆரம்பிக்கப்படும் பாடசாலைகளை மாலை 4 மணிவரை நடத்திச்செல்ல முடியும்.

200 மாணவர்களுக்கு அதிகமாக உள்ள ஆரம்பக் கல்வி தரங்களைக் கொண்ட பாடசாலைகளில் முதலாம் தர மாணவர்கள் திங்கட்கிழமை மாத்திரம், தரம் இரண்டு மாணவர்கள் செவ்வாய்க்கிழமை மாத்திரம், மூன்றாம் தர மாணவர்கள் புதன்கிழமை மாத்திரம் பாடசாலைகளுக்கு வருகை தரவேண்டும். நான்காம் தர மாணவர்கள் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை என்ற இரண்டு நாட்களிலும் பாடசாலைகளுக்கு சமூகம் தரவேண்டும். எனினும் ஐந்தாம் தர மாணவர்கள் திங்கள் முதல் வெள்ளி வரை அனைத்து நாட்களிலும் பாடசாலைகளுக்கு சமூகம் தரவேண்டும்.

ஆகஸ்ட் 10ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் போது அனைத்து ஆசிரியர்களும் பாடசாலைகளுக்கு சமூகம் தரவேண்டும். இந்தக்காலப்பகுதியில் கணிப்பீடுகள், உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாதிரிப் பரீட்சைகளை தவிர்ந்த ஏனைய எந்த வகுப்புகளுக்கும் மாதாந்த பரீட்சையோ அல்லது தவணை பரீட்சைகளோ நடத்தப்படக்கூடாது.

தரம் 5க்கு புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 11 ஆம் திகதி நடத்தப்படும். இதன்போது முதலாம் வினாத்தாளுக்கு பதில் வழங்க மேலதிகமாக 15 நிமிடங்கள் வழங்கப்படும். இந்த அனைத்து ஏற்பாடுகளும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன் கல்வி அமைச்சின் இந்த சுற்றுநிருபத்துக்கு புறம்பாக எவ்வித மீறல் செயற்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது என்று அதிபர்கள், கல்விப் பணிப்பாளர்கள், மாகாண கல்விப்பணிப்பாளர்கள், மாகாண கல்வி அமைச்சுக்களின் செயலாளர்கள் கல்வி அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை கொரோனா தடுப்புக்காக இந்த கல்வி செயற்பாட்டு நடவடிக்கைகள் ஆகஸ்ட் 10 முதல் ஒக்டோபர் 6 ம் திகதி வரை மாத்திரமே நடைமுறைப்படுத்தப்படும். அதன் பின்னர் பாடசாலைகளை இயல்பு நடத்திசெல்ல முடியும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Previous Post Next Post