யாழில் ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்திக் கொள்ளை! கணவன், மனைவி உட்பட மூவர் கைது!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணக் குடாநாடு மற்றும் பூநகரியில் கூரிய ஆயுதங்களைக் காண்பித்து அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பலைச் சேர்ந்த பிரதான சந்தேக நபரான நகுலேஸ் 4 மாதங்களாகத் தேடப்பட்டு வந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் என்று யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரிடமிருந்து சிறுசரையில் ஹெரோயின் போதைப்பொருள், 6 அரைப் பவுண் தங்க நகைகள், 20 தங்கப் பவுண் நகைகளை அடைவு வைத்ததற்கான பற்றுச்சீட்டுகள், முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.


அத்தோடு சந்தேக நபரிடமிருந்து நகைகளைப் பெற்று அடைவு வைத்த குற்றச்சாட்டில் அவரது மனைவியும் வாங்கிய குற்றச்சாட்டில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

“சாவகச்சேரி, மீசாலை சோலையம்மன் கோவிலடியில் உள்ள வீடொன்றுக்குள் கடந்த ஏப்ரல் 10ஆம் திகதி அதிகாலை நுழைந்த கொள்ளையா்கள் வீட்டில் தனித்திருந்த வயோதிப தம்பதியை தாக்கி படுகாயப்படுத்திவிட்டு நகை மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையிட்டு தப்பித்தனர்.

அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவத்தில் 15 ஆயிரம் ரூபாய் பணம், 5 தங்கப் பவுண் நகை என்பன கொள்ளையிடப்பட்டது. சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபரின் மருமகன் முறை உறவினர் சில நாள்களிலேயே கொள்ளையிடப்பட்ட நகையுடன் கைது செய்யப்பட்டார். சம்பவத்தில் பிரதான சந்தேக நபரான நகுலேஸைக் கைது செய்ய சாவகச்சேரி நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.


அத்தோடு உடுவில் அம்பலவாணர் வீதியில் கடந்த மே 5ஆம் திகதி அதிகாலை வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல், வயோதிபத் தம்பதியைத் தாக்கிவிட்டு 5 தங்கப் பவுண் நகைகள் மற்றும் 5 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டுத் தப்பித்தது.

வயோதிபத் தம்பதியைக் கட்டிவைத்துவிட்டு குடும்பத் தலைவரின் தலையில் கூரிய ஆயுதத்தால் கொத்தி கொள்ளைக் கும்பல் சித்திரவதை செய்துள்ளது. அதனால் படுகாயமடைந்த குடும்பத்தலைவர், தெல்லிப்பழை வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றிருந்தார்.

இந்தச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபராக நகுலேஸ் செயற்பட்ட நிலையில் தேடப்பட்டு வந்தார்.

கடந்த 10ஆம் திகதி கொடிகாமம் பகுதியில் வீட்டுக்குள் புகுந்த மூன்றரைப் பவுண் தங்க நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் நகுலேஸ் நேரடியாகத் தொடர்புபட்டிருந்தார். அத்துடன், பூநகரியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தின் போது சந்தேக நபரால் 15 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் மோதிரம் என்பன கொள்ளையிடப்பட்டது.


இந்த நிலையிலேயே 4 மாதங்களுக்கு மேலாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்” என்று யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கொள்ளை மற்றும் திருட்டில் முழுநேரமாக செய்யும் சிலரில் மானிப்பாய் – நவாலி தெற்கைச் சேர்ந்த 45 வயதுடைய செல்வராசா நகுலேஸ்வரன் அல்லது நகுலேஸூம் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post