யாழ்ப்பாணத்தின் மூத்த ஓவியர் இராசையா உயிரிழப்பு!



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணத்தின் மூத்த பிரபல்யமான ஓவியர் ஆ.இராசையா இன்று காலமாகியுள்ளார்.

புற்று நோய்த் தாக்கத்துக்கு உட்பட்டிருந்த அவர் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்திருப்பதாக தெரியவருகிறது.

ஓவியர் பற்றிய வரலாறு

16.08.1946 இல் அச்சுவேலியில் ஆசை – செல்லம்மா தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்த ஓவியர் இராசையா தற்போது இல 36, பண்டாரிக்குளம் வீதி, நல்லூரைத் தனது வாழ்பதியாகக் கொண்டுள்ளார். இலங்கையின் மிகப்பிரபல ஓவியர்கள் வரிசையில் வைத்து எண்ணப்படும் இவர் பிறப்பு முதல் 1965 வரை அச்சுவேலியில் வாழ்ந்தவர்.

அச்சுவேலி மத்திய கல்லூரியின் பழைய மாணவர். ஓவியத்தின்பால் கொண்டிருந்த ஆர்வத்தினால் பாடசாலைக் காலத்தில் ஓவிய பாடத்திற்கே அதிக மதிப்பெண்களைக் பெற்றதாகக் கூறும் இவர் பாடசாலைக் காலத்தில் தனக்குச் சித்திர பாடத்துறையில் போதிய வழிகாட்டல் கிடைக்கவில்லை எனவும் அங்கலாய்க்கிறார். 


ஓவிய பாடத்தில் மேற்படிப்பைத் தொடர்வதென்பதில் சமூகம் அக்கறை காட்டாத காலகட்டத்தில் வீட்டாருடைய எதிர்பையும் மீறி கொழும்பு நுண்கலைக்கல்லூரியில் (College of Art and Craft) அனுமதி பெற்று 1966 தொடக்கம் 1969 வரையான காலப்பகுதியில் ஓவிய நுட்பங்களைப் பயின்றார்.

ஸ்கெச் (Sketch) பண்ணுதல், பிரதிமை (Portrait) பண்ணுதல் என எதிலும் தேர்ந்தவராக விளங்குகின்றார். தைல வர்ணம், நீர் வர்ணம், பஸ்டல் என ஓவியக் கலைக்குரிய எவ்வூடகத்தையும் நேர்த்தியாகக் கையாளும் ஆளுமை இவருக்கு உண்டு. 

நிலக்காட்சி ஓவியங்களை வரைவதில் தனித்துவம் பெற்று விளங்குகின்றார். அச்சுவேலிப் பிரதேசத்தின் இயற்கை அழகு, வல்லைப் பிரதேசக் நீரோடைக் காட்சிகள், பனைகளும் தாளம் பற்றைகளும் நிரம்பிய காட்சிகள் என இளமையில் தான் தரிசித்த ஊரின் அழகை நிலக்காட்சி ஓவியங்களாக வரைந்து பெருமை பெற்றுள்ளார். இந்த ஓவியங்கள் பல இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பதையும் இங்கு சுட்டிக் காட்டுதல் பொருத்தம்.


இவர் வரைந்த பிரதிமை (Portrait) ஓவியங்களும் பிரபலமானவை. யாழ். பல்கலைக்கழகத்தில் உள்ள பேராசிரியர் சு.வித்தியானந்தன், பேராசிரியர் மகேஸ்வரன் ஆகியோரின் மெய்யுருக்களும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உள்ள பசுபதிச் செட்டியார், நாகலிங்கச் செட்டியார் மற்றும் இந்துவின் அதிபர்களது மெய்யுருக்களும் இவரது கைவண்ணத்தில் உருவானவை என்பது குறிப்பிடத்தக்கது.

1971 இல் வேலணை மத்திய கல்லூரியில் சித்திரபாட ஆசிரியராக நியமனம் பெற்ற இவர் பலாலி ஆசிரிய கலாசாலையில் பயிற்சி பெற்று 1975 தொடக்கம் 1983 வரை கொழும்பு றோயல் கல்லூரியில் பணியாற்றினார். இனக்கலவரத்தின் பாதிப்புக்கள் இவரையும் விட்டுவைக்கவில்லை. இதனால் தமிழ் மண்ணிலேயே வாழ்வது என்ற முடிவுடன் உறுதி பூண்டு வாழ்ந்து வருகின்றார்.


இலங்கை முத்திரைப் பணியக ஓவியக் குழுவில் ஓவியர் இராசையா இடம்பெற்றமை அச்சுவேலிக்குப் பெருமை தரக் கூடிய அம்சமாகும். இலங்கை அரசின் எட்டு முத்திரைகளுக்கான ஓவியங்களை இவர் வரைந்துள்ளார். சேர். பொன். இராமநாதன், சேர். பொன். அருணாசலம், சேர். வைத்திலிங்கம் துரைசுவாமி, சேர்.ஜோன் கொத்தலாவல, ஜோர்ஜ் ஈ.டி. சில்வா, ஈ.பி. மல்லசேகரா ஆகியோரது மெய்யுருக்களும் ‘தவலம்’ என்ற மலையகப் போக்குவரத்து மார்க்கம், இலங்கையின் முதற் புகைவண்டி ஓவியம் என்பனவுமே அவையாகும்.

ஓவியர் ஆசை இராசையாவின் படைப்புக்களில் வெளிக்காட்டப்படும் உருவங்கள் யாழ். மண் சார்ந்ததாகவே இருக்கின்றன. இவரது முதலாவது தனிநபர் ஓவியக் கண்காட்சி 1985 இல் அச்சுவேலி புனித தெரேசா மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது.


ஓவியத்துறை சார்ந்து பல பட்டங்களையும் விருதுகளையும் ஆசை இராசையா பெற்றுள்ளார். நல்லூர் பிரதேச செயலகம் வழங்கிய கலைஞானச் சுடர் (2009), வடமாகாண ஆளுநர் விருது (2009), கலாபூஷணம் விருது (2010), கொழும்புத் தமிழ்ச் சங்க விருது (2012), ஞானம் சஞ்சிகை விருது (2012), எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் ‘தமிழியல் விருது’ (2013), திருமறைக் கலாமன்றம் வழங்கிய கலைஞானபூரணன் விருது (2014) என்பன குறிப்பிடத்தக்கனவாகும்.

யாழ். பல்கலைக்கழகச் சித்திரமும் வடிவமைப்பும் துறையில் கற்கும் மாணவர்களுக்கு வருகை விரிவுரையாளராகத் தற்போது பணியாற்றி வருகின்றார். ஆசை என ஆன்றோரால் ஆசையாக அழைக்கப்படும் இக்கலைஞர் தரமான நூல்களின் வடிவமைப்பாளராகவும் அட்டைப்பட ஓவியராகவும் நிலவுருக்கள் மற்றும் மெய்யுருக்களை வரைவதில் புகழ் பெற்றவராகவும் இன்றும் தனது கலைச்சேவையைத் தொடர்ந்தார் ஓவியர் இராசையா.

நன்றி – தகவல் தொகுப்பு – அளவையூர் கவிக்குமரன் கலைஞானமணி லம்போ
Previous Post Next Post