பிரான்ஸ்-பரிஸ் மாணிக்கப் பிள்ளையாரின் தேர் வீதியுலா நிறுத்தம்!


பாரிஸ் மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த தேர் தெருவீதி உலா இந்த முறை நடைபெறமாட்டாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆண்டு தோறும் ஓகஸ்ட் மாத இறுதியில் பாரிஸ் நகர நிர்வாகத்தின் ஆதரவுடன் நகர மக்களால் ஒரு பாரம்பரிய விழா போன்று கொண்டாடப்பட்டுவரும் தேர்த்திருவிழா இந்த முறை கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாகப் பேணப்படவேண்டிய சுகாதாரக் கட்டுப்பாடுகளின் நிமித்தம் இரத்துச் செய்யப்படுவதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

“ஆயிரக்கணக்கான மக்களினதும் அந்தணர்களினதும் நலனைக் கருத்தில் கொண்டு மிகவும் கவலைக்குரிய இந்த முடிவை எடுக்க நேர்ந்துள்ளது” என்று ஆலயத்தின் நிர்வாக செயலாளரும் ஆலய ஸ்தாபகரின் உறவினருமான சுபாஜினி ராஜ்குமார் ‘பரிஷியன்’ பத்திரிகைக்குத் தெரிவித்திருக்கிறார்.


தேர் வீதியுலா இரத்துச் செய்யப்படுவது கடந்த, 25 ஆண்டுகளில் இது முதல் முறை என்றும் எனினும் ஆலயத்தில் வருடாந்த திருவிழா பூசைகள் எதிர்வரும் 17 ஆம் திகதி தொடக்கம் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையான அடியார்களுடன் நடைபெறும் எனவும் அவர் கூறியிருக்கிறார்.

பிரான்ஸ் வாழ் தமிழர்களின் வர்த்தக மையமாக விளங்கும் டுய La Chapelle பகுதியில் மிகச் சிறியதோர் இடத்தில் அமைந்திருக்கும் மாணிக்க விநாயகர் ஆலயத்தின் தேர் வீதி உலாவில் இந்துக்கள் மட்டுமன்றி இனம், சமயம் என்ற பேதமின்றி வெளிநாட்டவர்கள் அடங்கலாக சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்குபற்றுவது வழக்கமாகும்.
Previous Post Next Post