அனைத்துப் பொறுப்புக்களிலிருந்தும் மணிவண்ணனைத் தூக்கி எறிந்தது முன்னணி!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
தமிழ் அரசியலில் இளைஞர்களால் கவர்ந்து இழுக்கப்பட்ட சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து நீக்க கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது.

நேற்று வியாழக்கிழமை இரவு கூடிய மத்திய குழு, சட்டத்தரணி வி.மணிவண்ணனை முன்னணியின் பதவி நிலைகளிலிருந்து நீக்கும் இந்த முடிவை எடுத்தது.

இந்தக் கூட்டத்துக்கு மத்திய குழு உறுப்பினரான சட்டத்தரணி வி.மணிவண்ணன் அழைக்கப்பட்டிருக்கவில்லை.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இம்முறையும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டது. மூன்றாவது முறையாகவும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் போட்டியிட்டார்.

எனினும் சட்டத்தரணி வி. மணிவண்ணனை விலக்கிவைத்தே அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி நடவடிக்கைகளை முன்வைத்திருந்தது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர்கள், மணிவண்ணனுக்கு பரப்புரைகளை முன்னெடுக்கக் கூடாது என்ற பணிப்பும் தலைமையினால் விடுக்கப்பட்டிருந்தது.

அத்தோடு சட்டத்தரணி வி.மணிவண்ணன் சார்பில் இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பரப்புரைக் கூட்டங்களுக்கும் முன்னணியின் உயர்மட்டம் குறுக்கீடு செய்தது.

சட்டத்தரணி வி.மணிவண்ணனின் ஆதரவுத் தளம் பொதுத் தேர்தலில் அதிகரித்தது. அதனை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொதுத் தேர்தலுக்கு முன்னர் ஊடகவியலாளர்களிடம் ஏற்றுக்கொண்டிருந்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்றுக்கு தெரிவானதில் மணிவண்ணனின் பங்கும் கணிசமாக இருந்தது.

பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் மூன்றாம் நிலையைப் பெற்றார். அதனால் அவர் அண்மைய நாள்களாக ஒதுக்கப்பட்டார்.

மேலும் மணிவண்ணனை முன்னணியின் தலைமையுடன் சமரசம் செய்யும் பணியும் கல்வியாளர்களால் முன்னெடுக்கப்பட்டது. மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் நிலை வழங்குவதாகவும் உறுதியளிக்கப்பட்டது.

இந்த நிலையில் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தொடர்பில் முடிவெடுக்க கட்சியின் மத்திய குழுவை செயலாளர் நேற்றிரவு கூட்டியிருந்தார். இந்தக் கூட்டத்துக்கு முன்னதாக நேற்று மாலை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்களில் ஒருவரான சட்டத்தரணி க.சுகாஷ், மணிவண்ணன் தரப்பு மீது குற்றச்சாட்டு ஒன்றை தனது முகநூல் பக்கம் ஊடாக முன்வைத்திருந்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மத்திய குழுவில் இல்லாத சட்டத்தரணி க.சுகாஷ், மத்திய குழுவில் அங்கம் வகிக்கும் அமைப்பாளர்களுக்காக இந்த தகவலை பகிர்ந்திருந்தார்.

கட்சியின் தலைமையை துதி பாடும் உறுப்பினர்கள் இடையே சட்டத்தரணி வி.மணிவண்ணன் மட்டுமே தன்னால் எவற்றை செய்ய முடியும் என பரப்புரையில் வெளிப்படுத்தினார் என்று இளைஞர்களால் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, சட்டத்தரணி வி.மணிவண்ணனின் எதிர்கால நிலைப்பாடு தொடர்பில் அவரிடம் கேட்ட போது, “கட்சியின் தேசிய அமைப்பாளர், ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டதாக கட்சியின் தலைவரால் அறிவிக்கப்படவில்லை. அதன் பின்னரே எமது நிலைப்பாட்டை அறிவிக்க முடியும்” என்று பதிலளித்தார்.
Previous Post Next Post