மாணவனை முடிவெட்டச் சொன்ன அதிபர் மீது பாடசாலைக்குள் புகுந்து தாக்குதல்! (படங்கள்)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கிளிநொச்சி ஊற்றுப்புலம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் இன்று போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். குறித்த போராட்டம் இன்று காலை 8 மணியளவில் பாடசாலை பிரதான வாயிலை மறித்து இடம்பெற்றது.

நேற்று பாடசாலை அதிபரை ஒரு தரப்பினர் தாக்க முற்பட்டதாக தெரிவித்து தமது பிள்ளைகள், அதிபர் ஆசிரியர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி தருமாறு கோரியே இந்த போராட்டம் இடம்பெற்றது.

பாடசாலை மாணவர்களின் பெற்றோரால் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரதான வாயிலை மறித்து பாடசாலை செயற்பாடுகளை முடக்கும் வகையில் குறித்த போராட்டம் இடம்பெற்றது. இதனால் பாடசாலையின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் ஒன்றரை மணிநேரம் வரை இடம்பெற்றிருக்கவில்லை.

262 பாடசாலை மாணவர்களை கொண்ட பாடசாலையில் தரம் ஒன்று முதல் சாதாரண தரம் வரை கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது. அதிபர் உட்பட 19 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் குறித்த பாடசாலையில் கடமையாற்றுகின்றனர்.

இவ்வாறான நிலையில் நேற்று புதன்கிழமை பாடசாலை மாணவர் ஒருவரை தலைமுடியை சீராக்கி பாடசாலைக்கு வருமாறும், பாடசாலை ஒழுக்க விதிகளை பேணுமாறும் பாடசாலை அதிபரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் குறித்த மாணவனின் சகோதரர் பாடசாலை நேரத்தில் அதிபரின் அலுவலகத்திற்குள் நுழைந்து தாக்குதல் மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டுள்ளதாகவும், தடுக்க முற்பட்ட ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான நிலையில் தமது பிள்ளைகளின் கல்வி பாதிப்படையாதவாறு அதிபர், ஆசிரியர்களை பாதுகாத்து தருமாறு கோரியே பெற்றோர் மற்றும் மாணவர்களால் பிரான வாயிலை மூடி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்கு வருகை தந்திருந்த கிளிநொச்சி கோட்டக்கல்லி அதிகாரி தர்மரட்ணம் மற்றும் கிளிநொச்சி பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பெற்றோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பொலிசார் பெற்றோரிடம் வாக்குறுதி வழங்கியுள்ளனர்.

பாடசாலையின் கௌரவத்தை பாதுகாக்குமாறும், உரிய சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் கிளிநொச்சி கோட்டக்கல்வி அதிகாரி தர்மரட்ணம் கிளிநொச்சி பொலிசாரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

தொடர்ந்து பாடசாலையின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் வழமைபோன்று இடம்பெற்றதுடன், அச்சுறுத்தலுக்குள்ளான பாடசாலை அதிபர் இன்றைய தினம் சமூகமளித்திருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேவேளை இவ்வாறான அச்சுறுத்தல்கள் மத்தியில் கடமைகளை சீராக செய்ய முடியாத மனநிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஆசிரியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.Previous Post Next Post