பிரான்ஸில் நத்தார் காலத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பில் பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு!



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பிரான்ஸில் தற்போது நடைமுறையில் உள்ள பொது முடக்கக் கட்டுப்பாடுகளில் எந்தத் தளர்வும் இருக்காது. குறைந்தது அடுத்த 15 நாட்களுக்கு - டிசெம்பர் வரை-அவை அப்படியே தொடர்ந்து இறுக்கமாகப் பேணப்படும்.
நாட்டின் பிரதமர் ஜீன் கஷ்ரோ(Jean Castex) இதனை இன்று செய்தியாளர் மாநாட்டில் அறிவித்தார்.

"மதிப்பீடுகளின்படி கடந்த வாரத்தில் வைரஸ் தொற்றின் வேகம் சற்றுக் குறைந்திருக்கிறது. ஆயினும் இரண்டாவது அலையின் தீவிரமான கட்டத்தை நாம் இன்னும் எட்டவில்லை. அது பெரும்பாலும் அடுத்தவாரம் ஆரம்பிக்கலாம் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. இந்தக்கட்டத்தில் கட்டுப்பாடுகளை நீக்குவதோ அல்லது தளர்த்துவதோ பொறுப்பற்ற செயலாகவே இருக்கும் "- என்றும் பிரதமர் தெரிவித்தார்.

நத்தாரை முன்னிட்டு உணவகங்கள், அத்தியாவசியமற்ற சிறு வர்த்தக நிலையங்களைத் திறப்பது குறித்து டிசெம்பர் முதலாம் திகதி தீர்மானிக்கப்படும் என்றும் அதுவரை அவை கண்டிப்பாக மூடப்பட்டிருக்கவேண்டும் என்றும் பிரதமர் அறிவித்தார்.

நத்தார் காலப்பகுதியில் கட்டுப்பாடுகள் தளர்ந்த ஒர் ஆறுதலான நிலைமை அனுமதிக்கப்படும் என்று உறுதி அளித்த பிரதமர், வருட இறுதிக்காகப் பெரும் எடுப்பில் ஒன்று கூடும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது அர்த்தமற்ற செயல் என்பதைச் சுட்டிக்காட்டினார். 

நாட்டின் கடந்த இருவார கால சுகாதார நிலைமையை மதிப்பீடு செய்யும் பாதுகாப்புச் சபைக் கூட்டம் இன்று காலை அதிபர் மக்ரோன் தலைமையில் நடைபெற்றது.பிரதமர், சுகாதார அமைச்சர் உட்பட அமைச்சர்கள் அதில் கலந்துகொண்டு வைரஸ் தொற்று நிலைவரத்தை ஆராய்ந்தனர். 

வைரஸின் இரண்டாவது அலையைச் சமாளிப்பதற்காகக் கடந்த ஒக்ரோபர் 28 ஆம் திகதி அதிபர் மக்ரோனால் அறிவிக்கப்பட்ட பொது முடக்கக் கட்டுப்பாடுகள் டிசெம்பர் வரை தொடர்ந்து நடைமுறையில் இருக்கின்றன.இந்தக் கட்டத்தில் அவற்றில் தளர்வுகள் எதுவும் உடனடியாக வராது என்ற தகவலையே பிரதமர் இன்று வெளியிட்டிருக்கிறார்.
Previous Post Next Post