யாழில் மேலும் ஒருவருக்குக் கொரோனா! பாதித்தோர் எண்ணிக்கை 131 ஆக அதிகரிப்பு!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
 
மருதனார்மடம் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் கொத்தணியில் மேலும் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் இன்று (டிசெ. 31) வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் அவருக்கு தொற்று உள்ளதாக அறிக்கை கிடைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இதன்மூலம் மருதனார்மடம் கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்ட 20ஆவது நாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 131ஆக உயர்வடைந்துள்ளது.

உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் மருதனார்மடம் கொத்தணியினால் பாதிக்கப்பட்டவருடன் நேரத் தொடர்புடையவர் என 14 நாள்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டவர் என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வுகூடத்தில் இன்று 240பேரின் பிசிஆர் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் ஒருவருக்கு மட்டுமே தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

ஏனையோருக்கு தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்துள்ளது என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
Previous Post Next Post