பாரிஸில் ட்ராம், பஸ் சேவைகள் 9 மணியுடன் நிறுத்தம்!

பொலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ரீன் ஏஜ் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்துப் பாரிஸ் புறநகரங்களில் ஆரம்பித்த வன்செயல்கள் நேற்றும் இன்றும் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவியுள்ளது. பல நகரங்களில் தீ வைப்புச் சம்பவங்களால் கரும்புகை மண்டலம் எழுவதை அவதானிக்க முடிகிறது. கார்கள், பஸ்கள், பொலீஸ் வாகனங்கள், ட்ராம் வண்டிகள், அரச அலுவலக வாகனங்கள் நூற்றுக் கணக்கில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

பாடசாலைகள், பொலீஸ் நிலையங்கள் அரசுக் கட்டடங்களுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது. இரவிரவாகத் தெருக்களில் கூடி வன்முறைகளில் ஈடுபட்டோரில் குறைந்தது 190 பேர்வரை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பாரிஸ் பிராந்தியத்தில் தீப் புகை பரவியதால் வளி பெரிதும் மாசடைந்து காணப்படுவதாக மாசுக் கட்டுப்பாட்டு அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று மூன்றாவது நாளாக இரவு நேரம் பெரும் வன்செயல்கள் வெடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாரிஸ் பிராந்தியத்தில் பஸ் மற்றும் ட்ராம் சேவைகளை இரவு ஒன்பது மணியுடன் நிறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாரிஸ் பொலிஸ் தலைமையகம் மற்றும் பொதுப் போக்குவரத்து சேவை வழங்குகின்ற RATP நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து பயணிகள் மற்றும் போக்குவரத்துப் பணியாளர்களது பாதுகாப்புக் கருதி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று பாரிஸ் பிராந்தியத் தலைவி வலெரி பெக்ரெஸ் (Valérie Pécresse) தனது ருவீற்றர் செய்தி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

எங்களது போக்குவரத்து சேவைகள் வீதிகளில் வன்செயல்களில் ஈடுபட்டுவருகின்ற கும்பல்களது இலக்காக மாறக் கூடாது - என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இதேவேளை, நாடெங்கும் இன்று வியாழன் இரவு 40 ஆயிரம் பொலீஸ் மற்றும் ஜொந்தாம் படையினர் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். பாரிஸ் புறநகரங்களில் ஐயாயிரம் பேர் கடமையில் ஈடுபடுவர் என்று உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டாமன்னா அறிவித்திருக்கிறார்.

வன்செயல்கள் கட்டுப்படுத்த முடியாமல் பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வசதியாகப் பொலீஸாருக்குக் கூடுதல் அதிகாரங்களை வழங்க வழி செய்யும் விதத்தில் நாட்டில் அவசரகால நிலையைப் (l'état d'urgence) பிரகடனம் செய்யுமாறு வலது சாரி எதிர்க்கட்சிகள் அரசுக்கு அழுத்தம் கொடுத்துவருகின்றன. ஆனால் அதற்கான நேரம் இதுவல்ல என்று அரசு மறுத்துள்ளது.
Previous Post Next Post