ஏழாலையைச் சேர்ந்த இருவருக்குக் கொரோனா! சங்கானை மரக்கறி, மீன் சந்தைகளும் மூடப்பட்டன!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
மருதனார்மடம் பொதுச் சந்தை கொரோனா வைரஸ் கொத்தணியில் மேலும் 2 பேருக்கு கோவிட் – 19 நோய்த் தொற்று உள்ளமை இன்று (டிசெ. 16) புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

மருதனார்மடம் பொதுச் சந்தை வியாபாரிகளுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்த ஏழாலையைச் சேர்ந்த 2 பேருக்கே இவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ளது.

இதன்மூலம் மருதனார்மடம் கொரோனா வைரஸ் கொத்தணியின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 68ஆக அதிகரித்துள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையிலேயே இந்த முடிவு வெளியாகியுள்ளது.

இதேவேளை சங்கானை மரக்கறிச் சந்தை மற்றும் மீன் சந்தை ஆகிய இரண்டும் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வலிகாமம் மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் அறிவித்துள்ளார்.

சங்கானை மரக்கறி சந்தை வியாபாரிகள் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று இடம்பெற்ற பிசிஆர் பரிசோதனையில் கண்டறிப்பட்டது. அதில் தொற்றுள்ள வியாபாரி ஒருவர் இன்று புதன்கிழமை சங்கானை மீன் சந்தைக்குச் சென்றுள்ளமை தொடர்பில் தகவல் கிடைக்கப் பெற்றதனையடுத்தே அந்தச் சந்தையும் மூடுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரியின் ஆலோசனை கிடைக்கும் வரை இரண்டு சந்தைகளையும் மூடுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றினால் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த முடியும். எனவே மக்களின் ஒத்துழைப்பு அவசியமாகின்றது” என்றும் வலி.மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் தெரிவித்தார்.
Previous Post Next Post