சுவிஸில் மூவருக்கு புதிய வைரஸ் உறுதி! பனிச்சறுக்கு விளையாட்டில் தொற்றுகள்!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
சுவிஸ், ஸ்பெயின், சுவீடன் ஆகிய ஐரோப்பிய நாடுகளிலும் புதிய மாற்றமடைந்த கொரோனா வைரஸ் தொற்றிய பலர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

சுவிஸில் இரண்டு பிரிட்டிஷ் பிரஜைகள் உட்பட மூவருக்குப் புதிய வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப் பட்டிருப்பதாக சுவிஸ் கூட்டாட்சி அரசின் பொதுச் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவர்களோடு தொடர்புள்ளவர்கள் அனைவரும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இவர்கள் மூவரும் பிரிட்டனில் இருந்து சில நாட்களுக்கு முன்னர் சுவிஸ் வந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.பிரிட்டனில் இருந்து அங்கு பரவியுள்ள புதிய வைரஸுக்கு சுவிஸில் VOC-202012/01 எனப் பெயரிடப் பட்டுள்ளது.

பனிச்சறுக்கு விளையாட்டு(ski slopes) திடல்களை சுவிஸ் கன்ரன் அரசுகள் இன்னமும் திறந்து வைத்திருப்பதால் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பிரிட்டிஷ் விடுமுறைகாலப் பயணிகள் அந்நாட்டில் தங்கியுள்ளனர். 

பனிச் சறுக்கல் விளையாட்டுக்காக தங்கியுள்ள பிரிட்டிஷ் பிரஜைகள் மத்தியில் புதிய வைரஸ் பரவல் ஆபத்துக் காணப்படுவதால் அத்தகையோர் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சுவிஸ் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

இதேவேளை, ஸ்பெயினில் நால்வருக்கும், சுவீடனில் ஒருவருக்கும் புதிய வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.பிரான்ஸ் ஜேர்மனி, நெதர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகளில் ஏற்கனவே இந்த வைரஸ் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டிருப்பது தெரிந்ததே.

புதிய வைரஸ் பற்றிய அச்சத்துக்கு மத்தியில் பல ஐரோப்பிய நாடுகளில் "பைசர் - பயோஎன்ரெக்" தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகின்றன.

பிரான்ஸில் பாரிஸ் உட்பட நாட்டில் மூன்று இடங்களில் இன்று தடுப்பூசி ஏற்றும் செயற்திட்டம் தொடங்கவுள்ளது. பாரிஸில் புறநகரான செவ்ரனில் (Sevran) உள்ள René-Muret மருத்துவமனையில் தடுப்பூசி ஏற்றும் முதலாவது உத்தியோகபூர்வ வைபவம் இன்று முற்பகல் இடம்பெறவுள்ளது.
Previous Post Next Post