தனிமைப்படுத்தப்படுகிறது பிரிட்டன்! போக்குவரத்தை நிறுத்துகிறது ஐரோப்பிய நாடுகள்?


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
திரிபடைந்த புதிய கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதை அடுத்து பிரிட்டனுக்கான விமான மற்றும் "ஈரோ ஸ்ரார்" ரயில் உட்பட சகல போக்குவரத்துகளையும் அடுத்த 48 மணிநேரங்களுக்கு நிறுத்திவைக்க பிரான்ஸ் முடிவு செய்திருக்கிறது.

ஞாயிறு நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருகின்ற இந்தத் தடை உத்தரவு ஜரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்தைப் பொறுத்து பின்னர் மறுபரிசீலனை செய்யப்படும். 

நேற்று மாலை நடைபெற்ற சுகாதாரப் பாதுகாப்பு சபைக் கூட்டத்துக்குப் பிறகு பிரான்ஸின் இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டது.

ஜேர்மனியும் பிரிட்டனுடனான விமானத் தொடர்புகளை நேற்று நள்ளிரவுடன் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அதிபர் அங்கெலா மெர்கல் முன்னதாக நேற்று  மாலை பிரெஞ்சு அதிபர் மக்ரோனுடன் இது குறித்துப் பேச்சு நடத்தினார் என்று தெரிவிக்கப்பட்டது. 

இதே போன்று பிரிட்டிஷ் விமான சேவைகளை நெதர்லாந்து அரசு நேற்று  ஞாயிறு காலை முதல் இடைநிறுத்தி உள்ளது. ஜனவரி முதல் திகதிவரை இத்தடை அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பெல்ஜியம் 'ஈரோ ஸ்ரார்' ரயில் மற்றும் பிரிட்டிஷ் விமானங்களது வருகையை 24 மணித்தியாலங்களுக்கு இடைநிறுத்தி உள்ளது. நிலைமையை மதிப்பிட்ட பின்னர் அடுத்த நடவடிக்கை பற்றித் தீர்மானிக்கப்படும் என்று அந்நாட்டின் பிரதமர் தெரிவித்திருக்கிறார்.

ஜனவரி 31 ஆம் திகதிவரை பிரிட்டனுடனான வான்வழிப் போக்குவரத்தை இடைநிறுத்துவதாக பல்கேரியாவும் அறிவித்துள்ளது. 

பிரிட்டனில் வேகமாகப் பரவிவருவதாகக் கூறப்படும் மாற்றமடைந்த புதிய வைரஸ் தொற்றினை அடுத்து நாட்டின் பெரும் பகுதி மூடி முடக்கப்பட்டிருக்கிறது. அங்கு நேற்று (ஞாயிறு) 36 ஆயிரம் புதிய தொற்றுக்கள் பதிவாகி உள்ளன. 326 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

திரிபடைந்த வைரஸ் முன்னையதைவிட வேகமாகப் பரவுவதாக பிரிட்டன் முறையிட்டிருப்பதை அடுத்து தத்தமது நாடுகளின் கட்டுப்பாடுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளுமாறு ஜரோப்பிய நாடுகளை உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியிருக்கிறது. 

கொரோனா வைரஸின் மாற்றமடைந்த புதிய வைரஸ் (new coronavirus variant) தென்னாபிரிக்காவிலும் வேகமாகப் பரவிவருகின்றது என்று அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது.
Previous Post Next Post