அல்வாயில் ஒருவருக்குக் கொரோனா! பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் தனிமைப்படுத்தலில்!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
அல்வாய் பகுதியைச்சேர்ந்த நபர் ஒருவருக்கு மூதூரில் வைத்து மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த நபர் டிசெம்பர் 19ஆம் திகதியிலிருந்து நேற்றுமுன்தினம் ஜனவரி 6ஆம் திகதிவரை பருத்தித்துறை அல்வாயிலுள்ள தனது வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தின் பணி நிமிர்த்தம் நேற்று மூதூர் பயணித்த போதே அவருக்கு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் தொற்றாளராக இனங்காணப்பட்டார்.

அவர் கோவிட் -19 சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். அவரது குடும்பம் வீட்டில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டது.

அத்துடன், அவரது இருபிள்ளைகளும் பருத்தித்துறை பகுதியிலுள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் நடாத்தப்பட்ட வகுப்புகளில் கடந்த 5ஆம் திகதி முதல் நேற்றுவரை பங்குபற்றியுள்ளனர்.

பாடசாலை அமைந்துள்ள பிரதேசத்துக்குப் பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர் ஆ.ஜென்சன் றொனால்ட்டினால் பாடசாலையின் நான்கு ஆசிரியர்களும் 32 மாணவர்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

ஏனைய தொடர்பாளர்களை இனங்கண்டு நோய்த் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பணியில் சுகாதாரப் பிரிவு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இதேவேளை, குறித்த பாடசாலையின் அதிபர் கடந்த வாரம் புலோலி தொற்றாளர் சென்றுவந்த தொலைத்தெடர்பு சேவை வழங்கல் நிலையத்துக்கு சென்றதால் ஏற்கனவே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post