யாழில் உறவினர்களின் பொறுப்பற்ற செயலால் நிறுத்தப்பட்டது திருமண நிகழ்வு!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கொழும்பில் இருந்து வருகைதந்திருந்த நிலையில் நேற்றைய தினம் பருத்தித்துறையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமண நிகழ்வு இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், மணமக்கள் குடும்பத்துடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை நகர் பகுதியைச் சேர்ந்த மணமக்களுக்கு எதிர்வரும் 23ம் திகதி திருமண நிகழ்வு நிச்சயிக்கப்பட்டிருந்தது.

குறித்த திருமணத்திற்காக மணமக்களின் உறவினரான நேற்றைய தொற்றாளர் தனது 6 வயது பிள்ளையுடன் கொழும்பில் இருந்து பருத்தித்துறைக்கு அண்மையில் வந்துள்ளார்.

கொரோனா அபாய வலயமாக காணப்படும் கொழும்பில் இருந்து வந்துள்ளமையால் சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு பருத்தித்துறை சுகாதாரப் பிரிவினரால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

குறித்த தொற்றாளர்கள் அவ் அறிவுறுத்தலையும் மீறி கடந்த தினங்களில் மணமக்கள் வீடு உள்ளிட்ட பல இடங்களில் நடமாடியுள்ளார்.

தொற்று உறுதி செய்யப்பட்ட நேற்றைய தினம் (ஜன-18) குறித்த திருமண நிகழ்வின் பொன் உருக்கும் சடங்கும் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் நேற்று மணமகன் வீட்டிற்கு சென்றிருந்த குறித்த தொற்றுறுதியானவர்கள் அங்கு மணமகன் குடும்பத்தினருடன் நெருக்கமாக இருந்து உறவாடியிருந்ததுடன், பிற்பகல் வேளையில் மணமகள் வீட்டிற்கும் சென்றுள்ளார்.

மணமகள் வீட்டில் குறித்த தொற்றாளர்கள் சென்றிருந்த நிலையில்தான் அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட தகவல் சுகாதார பிரிவினரால் தேடிச் சென்று வழங்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து பாதுகாப்பு கருதி திருமண நிகழ்வு இடைநிறுத்தப்பட்டதுடன், இரு தரப்பு வீட்டாரும் 14 நாட்களுக்கு தம்மை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளனர். பிசீஆர் பரிசோதனை பெறுபேறுகளை அடுத்து திருமணம் நிகழ்வினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.

அத்துடன் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் கடந்த நாடகளில் நடமாடிய இடங்கள் தொடர்பான விபரங்கள் சேகரித்து உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை சுய தனிமைப்படுத்தல் அறிவுறுத்தல் வழங்கப்பட்டவர்கள் சுகாதாரத் தரப்பினரது அறிவுறுத்தல்களுக்கு அமைவாக நடந்து கொள்வது எவ்வளவு அசியமானது என்பதை மேற்குறித்த சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது.

சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவோர் பரிசோதனை முடிவுகள் வரும்வரை தம்மை பிறரிடம் இருந்து தனிமைப்படுத்துவது மிக மிக அவசியமாகும்.

அதன் மூலமே எமது பிரதேசத்தில் கொரோனாத் தொற்று பரம்பல் ஏற்படாது பாதுகாக்கவும், எமது மக்களின் அன்றாட வாழ்வின் இயல்பு நிலை சீர்கெடாதிருக்கவும் முடியும்.

ஆகவே சுகாதார தரப்பினரது அறிவுறுத்தல்களை உதாசீனம் செய்யாது நடந்து கொள்வதுடன், அநாவசிய பயணங்களை தவிர்த்து, சுகாதார-பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி அத்தியாவசிய பயணங்களை மேற்கொள்வது ஒவ்வொருவருடைய சமூகக் கடமையாகும்.
Previous Post Next Post