பிரான்ஸில் வெளியில் நடமாட வெளியிட்ட படிவத்தில் குழப்பம்! திருத்திய புது வடிவம் வெளியானது!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
வீடுகளுக்கு வெளியே நடமாடுவோர் வைத்திருக்க வேண்டிய கட்டாய அனுமதிப் பத்திரம் தொடர்பாக எழுந்த குழப்பங்களை அடுத்து அதன் புதிய இலகுவான திருத்திய வடிவத்தை உள்துறை அமைச்சு நேற்றிரவு வெளியிட்டுள்ளது.

நாடெங்கும் இரவு ஏழு மணிமுதல் மறு நாள் காலை ஆறு மணிவரை அமுலில் இருக்கின்ற ஊரடங்கு நேரத்தில் பயன்படுத்துவதற்காக ஒரு படிவமும் -
பொது முடக்க கட்டுப்பாடுகள் அறிவிக்கபட்டுள்ள 16 மாவட்டங்களிலும் பகல் நேரத்தில் பயன்படுத்துவதற்கான ஒரு பத்திரமுமாக பகலுக்கும் இரவுக்கும் என இரண்டு படிவங்கள் தனித் தனியே வெளியிடப்பட்டுள்ளன.

அவற்றை உள்துறை அமைச்சின் உத்தியோகபூர்வ இணையப் பக்கத்திலும் (site du ministère de l’Intérieur,) மற்றும் l’appli TousAntiCovid செயலி ஊடாகவும்.டிஜிட்டல் மற்றும் காகித வடிவங்கள் இரண்டிலும் பெற்றுக்கொள்ள முடியும்.

அனுமதிப்படிவத்துடன் பகலில் நடமாடுவதற்கு நேரக் கட்டுப்பாடு கிடையாது.
(அந்தப் படிவங்களுக்கான இணையத் தள இணைப்புக்குச் செல்ல இங்கே அழுத்துங்கள்)

இதேவேளை - தங்கள் வதிவிடத்தில் இருந்து பத்துக் கிலோ மீற்றர்கள் தூரத்துக்குள் நடமாடுவோர் அதனை உறுதிப்படுத்துவதற்கு தங்களது வதிவிட முகவரியை அத்தாட்சிப்படுத்தக் கூடிய அடையாள அட்டை போன்ற ஆவணங் களையும் பொலீஸாருக்கு காண்பிக்க முடியும். 

பத்துக் கிலோ மீற்றர்களுக்கு அப்பால் செல்ல வேண்டியவர்களே படிவங்களைப் பூர்த்தி செய்வது கட்டாயமானதாக இருக்கும்-என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளதாக பாரிஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட் டுள்ளன.

பாரிஸ் உட்பட நாடெங்கும் 16 மாவட்டங்களில் அறிவிக்கப்பட்ட பொது முடக்க கட்டுப்பாடுகளை அடுத்து வெளியே நடமாடுவோர் பயன்படுத்த வேண்டிய படிவம் ஒன்றை முதலில் நேற்றுக் காலை உள்துறை அமைச்சு தனது இணையத் தில் வெளியிட்டிருந்தது.

இரண்டு பக்கங்களுக்கு நீண்ட அந்தப் படிவத்தில் வெளியே நடமாடுவதற்கான 15 காரணங்களும் கிலோ மீற்றர் தூரம் தொடர்பான விடயங்களும் இடம்பெற்றிருந்தன. 

பகல் பொது முடக்கத்துக்கும் இரவு ஊரடங்கு நேரத்துக்கும் ஒரே பொதுவானதாக வெளியிடப்பட்ட அந்தப் படிவம் இலகுவாக விளங்கிக் கொள்ள முடியாததாக இருந்ததால் மக்கள் மத்தியில் குழப்பம் எழுந்தது.

அதன் தெளிவற்ற தன்மையை உள்துறை அமைச்சு உடனடியாகவே ஏற்றுக் கொண்டது.பின்னர் புதிய, இலகுவாகப் பூர்த்தி செய்யத்தக்க திருத்திய படிவத்தை அமைச்சு நேற்றிரவு வெளியிட்டது.

இந்த முறை அறிவிக்கப்பட்டிருக்கின்ற மூன்றாவது பொது முடக்கக் கட்டுப்பாடுகள் மக்கள் தாராளமாக வெளியே நடமாடுவதை அனுமதிக்கும் வகையில் மிகவும் தளர்வுத் தன்மை கொண்டவையாக இருப்பது குறிப்பிடத்தக்கது..

குமாரதாஸன், பாரிஸ்.
Previous Post Next Post