வடமராட்சியில் மண் கடத்தலைத் தடுக்கச் சென்ற பொலிஸாரை டிப்பரால் மோததித் தள்ளிய கடத்தல்காரர்கள்!


வடமராட்சி கிழக்கில் மணல் கடத்தலில் ஈடுபட்டோரைத் தடுக்க முற்பட்ட பொலிஸ் அலுவலகர் டிப்பர் வாகனம் மோதி படுகாயமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் வடமராட்சி வல்லிபுக்குறுச்சியில் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வடமராட்சி கிழக்கிலிருந்து சட்டத்துக்குப் புறம்பமாக மணல் அகழ்வில் ஈடுபட்டோர் டிப்பர் வாகனத்தில் மணலை ஏற்றிப் பயணிப்பதாக உள்ளூர் மக்களால் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கப்பட்டது.

அதனை அறிந்து பருத்தித்துறை பொலிஸ் நிலைய முறைப்பாட்டுப் பிரிவு பொறுப்பதிகாரி, உப பொலிஸ் பரிசோதகர் அஜித் தலைமையில் 6 பேர் கொண்ட பொலிஸ் பிரிவு சம்பவ இடத்துக்குச் சென்றது.

வல்லிபுரக்குறிச்சிப் பகுதியில் டிப்பர் வாகனம் வருவதைக் கண்ட பொலிஸார் அதனை மறிக்க முற்பட்டுள்ளனர். எனினும் டிப்பர் வாகனம் உப பொலிஸ் பரிசோதகரை மோதிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த உப பொலிஸ் பரிசோதகர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பருத்தித்துறை பொலிஸார் மோதிவிட்டுத் தப்பித்த டிப்பர் மற்றும் சாரதியைத் தேடி வருகின்றனர்.
Previous Post Next Post