த.தே.கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கொரோனாத் தொற்றால் உயிரிழப்பு!


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரட்ணசிங்கம் (வயது-80) கோவிட்-19 நோய்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் காலமானார்.

கோவிட்-19 நோய்த்தொற்றால் பீடிக்கப்பட்டு கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் அவர் உயிரிழந்தார் என்று திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

திருகோணமலை மாவட்டம், மூதூர், சேனையூரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் சேனையூர் மெதடித்த மிசன் தமிழ்க் கலவன் பாடசாலை, மூதூர் புனித அந்தோனியார் பாடசாலை ஆகியவற்றில் கல்வி பயின்று பின்னர் மட்டக்களப்பு ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியப் பயிற்சி பெற்றார்.

1960 ஆம் ஆண்டு முதல் பல பாடசாலைகளில் பணியாற்றிய பின்னர் 1982 இல் சேனையூர் மத்திய கல்லூரியின் அதிபராகப் பதவி உயர்வு பெற்றார்.

1998இல் திருகோணமலை பிராந்தியக் கல்வித் திணைக்களத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டு பின்னர் தம்பலகாமம் கோட்டக் கல்வி அதிகாரியாகப் பணியாற்றி இளைப்பாறினார்.

துரைரத்தினசிங்கம் 2001 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் உறுப்பினர்களில் இரண்டாவதாக வந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகவில்லை. ஆனாலும், தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சிவசிதம்பரம் மறைவைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக 2002 ஜூன் மாதத்தில் நாடாளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்டார். திருகோணமலைத் தேர்தல் தொகுதியில் 2004 ஆம் ஆண்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

துரைரத்தினசிங்கம் 2015 நாடாளுமன்றத் தேர்தலில் ததேகூ வேட்பாளராக திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகவில்லை. இவர் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
Previous Post Next Post