இங்கிலாந்தில் இந்திய வைரஸால் மற்றுமொரு அலை உருவாகும் அச்சம்!


  • குமாரதாஸன். பாரிஸ்.
இங்கிலாந்தில் பரவிவரும் மாறுபாடடைந்த இந்திய வைரஸ் திரிபு அங்கு மற்றோர் அலையாகத் தாக்கக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு சுகாதார ஆலோசனைகளை வழங்குகின்ற அறிவியல் குழுவின் உறுப்பினரான பேராசிரியர் ஆண்ட்ரூ ஹேவர்ட் (Prof Andrew Hayward) "இங்கிலாந்து மற்றோர் வைரஸ் அலையின் ஆரம்ப கட்டத்தில் உள்ளது" என்று தெரிவித்திருக்கிறார்.
 
இதேவேளை -இங்கிலாந்து தனது மக்களின் முழுமையான நோய் எதிர்ப்புச் சக்திக்கான ஓர் ஊக்கியாக (Booster) மூன்றாவது தடுப்பூசி ஒன்றை மேலதிகமாக வழங்குவது பற்றி ஆலோசித்து வருகிறது.

தற்போது வழங்கப்பட்டு வருகின்ற இரண்டு தடுப்பூசிகளும் மட்டும் கொரோனா வைரஸின் மாறுபாடடைந்த திரிபுகளை முழுமையாக எதிர்ப்பதற்குப் போதுமா? இந்தியாவில் தோன்றிப் பரவி வருகின்ற வைரஸ் திரிபு தடுப்பூசிகளை எதிர்க்கின்ற வல்லமை வாய்ந்ததா? இவை போன்ற கேள்விகளுக்கு முழு அளவிலான அறிவியல் ஆராய்ச்சிகள் மூலம் தெளிவான பதில் இன்னமும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் இந்தியத் திரிபு வைரஸின் பரவல் இங்கிலாந்தில்
அதிகரித்து வருகிறது. இதுவரை சுமார் மூவாயிரம் பேருக்கு இந்தியத் திரிபு வைரஸ் தொற்றியுள்ளது. அதனை எதிர்கொள்ளவும் புதிய வைரஸ் கிரிமிகளிடம் இருந்து நிலையான பாதுகாப்பைப் பெறவும் மூன்றாவது ஊசி ஓர் ஊக்கியாக (Booster)இருக்கும் என்று நம்பப்படுகிறது.

மூன்றாவது தடுப்பூசியாக வழங்குவதற்கு ஏழு வகையான தடுப்பூசிகளில்
ஒன்றைத் தெரிவு செய்வதற்காக அவற்றைப் பரீட்சித்துப் பார்க்கும் சோதனைகள் (clinical trial) ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சர் Matt Hancock அறிவித்திருக்கிறார். 

உலகில் கொரோனா வைரஸுக்கு மூன்றாவது தடுப்பூசியைப் பரிசோதிக்கின்ற முதலாவது முயற்சி இதுவாகும். ஆயிரக்கணக்கான தொண்டர்களில் நடத்தப்படுகின்ற இந்தப் பரிசோதனைகளின் தரவுகளின் அடிப்படையில் எதிர்வரும் குளிர் காலத்துக்கு முன்பாக மூன்றாவது ஊசி ஏற்றும் இயக்கத்தை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை - செல்வந்த நாடுகள் இவ்வாறு இரண்டுக்கு மேற்பட்ட ஊசி மருந்துப்பாவனை பற்றி ஆலோசித்து வருகின்ற போது உலகின் பல வறிய நாடுகளில் இன்னமும் பல மில்லியன் மக்களுக்கு முதல் தடுப்பூசி கூட எட்டாத
நிலைமை காணப்படுகிறது.

உலக சுகாதார நிறுவனம் கவலை

செல்வந்த நாடுகள் சில அடுத்த கட்டமாக குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்குத் தடுப்பூசி ஏற்றுவதற்கு ஆயத்தமாகிவருகின்றன. அதே சமயம் வறிய நாடுகளில் வளர்ந்தோருக்கும் வயோதிபர்களுக்கும் இன்னமும் ஓர் ஊசி கூட எட்டவில்லை.

வைரஸ் தடுப்பூசிப் பங்கீட்டில் காணப்படும் இத்தகைய ஏற்றத்தாழ்வுகளைச்
சுட்டிக்காட்டியிருக்கின்ற உலக சுகாதார அமைப்பின் தலைவர், தங்களது குழந்தைகளுக்குத் தடுப்பூசி ஏற்ற விரும்பும் செல்வந்த நாடுகள் அதைக் கைவிட்டு அந்தத் தடுப்பூசிகளை வறிய நாடுகளுக்கு வழங்க முன்வரவேண்டும்
என்று கேட்டிருக்கிறார்.
Previous Post Next Post