இலங்கையில் கர்ப்பிணிப் பெண்களைப் பலியெடுக்கும் கொரோனா! மேலும் ஒருவர் உயிரிழப்பு!!


இலங்கையில் கொரோனாத் தொற்று காரணமாக மற்றுமொரு கர்ப்பிணித் தாய் உயிரிழந்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் காலி கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணித் தாய் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

அக்குரஸ்ஸ வில்பிட்ட பகுதியைச் சேர்ந்த 45 வயதான கர்ப்பிணித்தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்த இவர் தனது முதலாவது குழந்தையைப் பெறுவதற்காக தயாரான நிலையிலேயே கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஏப்ரல் 21ம் திகதி அவருக்கு வைரஸ் தொற்று இனம் காணப்பட்டதை அடுத்து அவர் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு ஒருவார காலம் சிகிச்சைபெற்று வந்த நிலையிலேயே நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். 

அவரது கணவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இனம் காணப்பட்டுள்ளது. அவர்களுக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது தொடர்பில் இதுவரை கண்டறியப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறெனினும் அவர்களோடு நெருங்கிய தொடர்புடைய மேலும் 17 பேர் வைரஸ் தொற்று நோயாளிகளாக இனம் காணப்பட்டுள்ளனர்.

இக்கர்ப்பிணித் தாயுடன் அவரது சிசுவும் மரணமடைந்துள்ள நிலையில் நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக மரணமடைந்த இரண்டாவது கர்ப்பிணித்தாய் இவராவார்.

முதலாவது வைரஸ் தொற்றுக்கு இலக்கான கர்ப்பிணித்தாய் கடந்த வாரத்தில் றாகம வைத்தியசாலையில் மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post