ஜரோப்பாவில் கோடையில் வெள்ளம்! ஜேர்மனியில் 58க்கும் மேற்பட்டோர் பலி! (படங்கள்)


வழமைக்கு மாறாகப் பெய்துவரும் கடும் மழை காரணமாக மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன. ஜேர்மனி, நெதர்லாந்து,
பெல்ஜியம், சுவிஸ் போன்ற நாடுகளை பெரு வெள்ளம் பாதித்துள்ளது. 

டசின் கணக்கிலானோர் உயிரிழந்துள்ளனர். கட்டடங்களும் வாகனங்களும் வெள்ளத்தில் அள்ளுண்டுள்ளன. சமீப கால வரலாற்றில் இருந்திராதவாறு கோடைப் பருவத்தில் கொட்டிய மழை யால் ஆறுகள் பெருக்கெடுத்துள்ளன. தாழ்ந்த பிரதேசங்கள் வெள்ளத்தில்மூழ்கி உள்ளன.

ஜேர்மனியின் மேற்குப் பகுதியில் மிக மோசமான சேதங்களும், உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன. Rhineland- Palatinate, Rhine-Westphalia ஆகிய இரு மாநிலங்களிலும் சொத்துக்களுக்குப் பலத்த சேதங்கள் பதிவாகி உள்ளன. 58 பேர்வரை உயிரிழந்துள்ளனர். பலர் காணாமற்போயிருக்கின்றனர்.

ஆறுகள் பெருக்கெடுத்தலால் வெள்ளத்தில் மூழ்கிய மேற்குப் பகுதிகளில் பொலீஸ் ஹெலிக்கொப்ரர்களும் படைப் பிரிவுகளும் மீட்டுப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இரண்டாம் உலகப் போருக் குப் பின்னர் மிக மோசமான பேரழிவு இது என்று வெள்ளம் பாதித்த பகுதி களைச் சேர்ந்த உள்ளூர் வாசிகள் தெரிவித்திருக்கின்றனர். 

மேற்கு நகரமாகிய Ahrweiler என்ற இடத்தில் மட்டும் 19 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. எழுபதுபேர் காணாமற்போயுள்ளனர். அங்கு அனர்த்த அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

Rhineland-Palatinate பிரதேசத்தில் பல்லாயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. பொதுப் போக்குவரத்துகளும் தடைப்பட்டுள்ளன.
 
அமெரிக்கா சென்றிருக்கும் அதிபர் அங்கெலா மெர்கல் (Angela Merkel) அங் ருந்தவாறு விடுத்த செய்தியில் உயிரிழந்தவர்களது குடும்பங்களுக்குத் தமது
அனுதாபங்களை வெளியிட்டிருக்கிறார்.

North Rhine-Westphalia மாநிலத்தின் தலைவரும் அடுத்த அதிபர் வேட்பாளருமாகிய அர்மின் லாசெற் (Armin Laschet) வெள்ளப் பாதிப்புகளை நேரில் சென்று பார்வையிட்டிருக்கிறார். 

புவி வெப்பம் அடைவதால் உருவாகும் காலநிலை மாறுதலே இந்த அனர்த்தத்துக்குக் காரணம் என்று தொடர்புபடுத்தி அவர் கருத்து வெளியிட்டிருக்கிறார்.

பெல்ஜியத்தில் கடந்த சில தினங்களாக பெய்த அடைமழை காரணமாக பிரெஞ்சு
மொழி பேசும் Wallonia பிராந்தியத்தில் ஆறுகள் கரையுடைத்துள்ளன. அங்குள்ள
Liege, Namur ஆகிய நகரங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஆறுகளில் வெள்ள நீர் மட்டம் உயர்வதால் இயன்றவரை நகரை விட்டு விரைவாக வெளி யேறுமாறு Liege நகர மேயர் மக்களைக் கேட்டிருக்கிறார்.
 
நெதர்லாந்தின் Roermond நகரில் இருந்து நூற்றுக் கணக்கான குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன. அங்கு ஏ2 நெடுஞ்சாலை உட்பட பல வீதிகள் மூடப்பட்டுள்ளன. 

ஜேர்மனியில் இருந்துவரும் வெள்ளம் நெதர்லாந்தின் எல்லையோரம் நதிகளில் கலப்பதால் அவை பெருக்கெடுக்கும் ஆபத்து உருவாகி உள்ளது.

சுவிற்சர்லாந்தின் மத்திய கன்ரன்களான பேர்ன், லூசென் (Bern, Lucerne) பிரதேசங்களில் என்றும் இல்லாதவாறு ஆறுகளில் நீர்மட்டம் ஆபத்தான அளவில் அதிகரித்து வருகிறது.  இன்றும் நாளையும் அங்கு மேலும் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு சில ஐரோப்பிய நாடுகள் வெள்ளத்தில் தத்தளிக்க ஸ்பெயின் நாடு மிக
மோசமான வெப்ப அனலால் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு கடந்த ஞாயிறன்று
40 டிகிறி செல்சியஸ் (degrees Celsius) வெப்பநிலை மட்றிட் நகரில் பதிவாகிஉள்ளது.


Previous Post Next Post