பிரான்ஸில் மாத இறுதிக்குள் அடுத்த கொரோனா அலை - சுகாதார அமைச்சர் எச்சரிக்கை!


  • குமாரதாஸன். பாரிஸ்.
பிரான்ஸின் சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன் இன்று தனது ருவீற்றர் பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், நாட்டில் கடந்த ஐந்து நாட்களில் டெல்ரா வைரஸ் தொற்றுக்கள் மிகவும் அதிகரித்துள்ளதாக எச்சரித்திருக்கிறார்.

சமூக இடைவெளி போன்ற சுகாதாரப் பழக்கங்களைப் பேணுவதுடன் இயன்றளவு விரைவாகத் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளுமாறு அவர் மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

தீவிரமாகப் பரவும் தன்மை கொண்ட டெல்ரா வைரஸ் பிரான்ஸின் கோடை விடுமுறைக் காலத்தை குழப்பிவிடக்கூடும் என்று எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்த நிலையில்"ஜூலை மாத இறுதியில்" நான்காவது தொற்றலை தோன்றக் கூடும் என்ற கணிப்பை சுகாதார அமைச்சர் இன்று முன்னறிவிப்புச் செய்துள்ளார்.

இதேவேளை, நோயாளர்களைப் பராமரிக்கின்ற சுகாதாரப் பணியாளர்களுக்குத் (soignants) தடுப்பூசியைக் கட்டாயமாக்குவது என்ற அரசின் திட்டம் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது . அதற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.

நோயாளர்கள் மற்றும் மூதாளர்களைப் பராமரிப்பவர்கள் தடுப்பூசியை ஏற்றிக்கொள்வது அவர்களது தார்மீகக் கடமை. அவ்வாறு செய்யுமாறு அரசு அவர்களிடம் கேட்பதை அவர்கள் மீது விரல் நீட்டிக் குற்றம் சாட்டுவதாகக் கருதிவிடக் கூடாது என்று சுகாதார அமைச்சர் கூறியிருக்கிறார்.

பிரதான எதிரணிக் கட்சித் தலைவி மரின் லூ பென், சுகாதாரப் பணியாளர்கள் உட்பட எவருக்கும் தடுப்பூசியைக் கட்டாயமாக்குவதைத் தனது கட்சி எதிர்ப்பதாகக் கூறியிருக்கிறார். 

அவரது 'Rassemblement national' கட்சியின் தேசிய மாநாட்டில் இன்று உரையாற்றிய அவர், தான் இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றிக்கொண்டார் என்ற தகவலை அறிவித்தார்.

இதற்கிடையில் - அரசாங்கப் பேச்சாளர் கப்ரியேல் அட்டால் நாட்டில் தடுப்பூசி ஏற்றியோர் ஏற்றாதவர் கள் என்ற இரு பிரிவினர் காணப்படுவது அவர்களிடையே மனக் கசப்புகளை உருவாக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசி காரணமாக சமூகத்தில் ஏற்படக் கூடிய முறிவை - பிளவைத்-தவிர்க்க வேண்டுமானால் பரவலாக சகலருக்கும் அதனை ஏற்றி முடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
Previous Post Next Post