ஜேர்மனி வெள்ளப் பெருக்கில் 180 பேர் உயிரிழப்பு! கொலைகளாக விசாரிக்க முஸ்தீபு!!


  • குமாரதாஸன், பாரிஸ்.
ஜேர்மனியில் ஏற்பட்ட மோசமான வெள்ள அனர்த்தத்தில் நிகழ்ந்த உயிரிழப்புக்களுக்கு அதிகாரிகளது அலட்சியம் காரணமா என்பது குறித்து விசாரிப்பதற்கான அடிப்படைகளை அந்நாட்டின் சட்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

தவிர்க்கப்பட்ட அல்லது தாமதமாக விடுக்கப்பட்ட எச்சரிக்கைகள் 180 பேரது மரணங்களுக்குப் பங்களித்ததா என்பது குறித்து சட்டவாளர்கள் விசாரணைகளைத் தொடங்கக் கூடும் என்று செய்தி வெளியாகி உள்ளது.

ஜூலை மாதம் மேற்கு ஜேர்மனியில் ஏற்பட்ட மழைவெள்ளப் பெருக்கில் குறைந்தது 180 பேர் உயிரிழந்தனர்.

பரந்த அளவில் ஏற்பட்ட பேரழிவுகள் அதிகாரிகள் முன் கூட்டியே மக்களை எச்சரிப்பதற்குத் தவறி விட்டனரா என்ற கேள்விகளை எழுப்பத் தூண்டியுள்ளன. அரச மற்றும் மாநில அரசுகளது அதிகாரிகள் இது தொடர்பான விமர்சனங்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்துள்ளது.
 
வெள்ள உயிரிழப்புக்களைக் கவனக் குறைவான சூழ்நிலைகளில் நிகழ்ந்த கொலைகள், உடல் பாதிப்புகள் என்ற வகையில் விசாரிப்பதற்கான அடிப்படைகளை ஆராய்துவருகின்ற சட்டவாளர்கள் முன்னெச்சரிக்கைகளை வழங்கி மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவதில் காட்டப்பட்ட அலட்சியம், பொறுப்பின்மை காரணமாக கொலைக்கு நிகரான சூழ்நிலைகளில் நிகழ்ந்த மரணங்களாக அவற்றை விசாரிப்பதற்கு (manslaughter probe) வாய்ப்புள்ளது.

வெள்ள நெருக்கடியைக் கையாண்ட முறைகளை நியாயப்படுத்தி உள்ள ஜேர்மனியின் வானிலை அவதான சேவை நிலையம்(German Meteorological Service) மழை தொடர்பாகத் தன்னால் விடுக்கப்பட்ட எதிர்வு கூறும் எச்சரிக்கைகளை உள்ளூர் அதிகாரிகள் உரிய நேரத்தில் மக்களிடம் சேர்ப்பிக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளது.

ஜேர்மனியில் ஆபத்துக்கால முன்னெச்சரிக்கைகள் வானொலி, சைரன், ஸ்மார்ட் தொலைபேசிச் செயலி(NINA) என்பவற்றின் மூலம் விடுக்கப்படுகிறது.

ஆனால் வெள்ளம் மிக மோசமாகப் பாதித்த இடங்களில் எச்சரிக்கைகள் மக்களைச் சரிவரச் சென்றடையவில்லை என்று கூறப்படுகிறது.
Previous Post Next Post