பயணக் கட்டுப்பாடுகளை நாளை தளர்த்துகிறது கனடா!


கொவிட் 19 தொற்று நோயைத் தொடர்ந்து கனடா மத்திய அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் பயணக் கட்டுப்பாடுகள் நாளை திங்கட்கிழமை முதல் தளர்த்தப்படுகின்றன.

மார்ச் 2020 -முதல் மூடப்பட்டிருக்கும் அமெரிக்காவுடனான எல்லை நாளை திறக்கப்பட்டு அமெரிக்காவில் இருந்து வரும் பயணிகள் கனடாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படவுள்ளனர்.

எனினும் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டமைக்கான ஆதாரத்தை அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

அத்துடன், ஹெல்த் கனடாவால் அங்கீகரிக்கப்பட்ட பைசர், மொடர்னா, அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஜோன்சன் & ஜோன்சன் தடுப்பூசிகளைப் பெற்றவர்களே கட்டுப்பாட்டு தளர்வு நடவடிக்கையின் கீழ் பயணம் செய்ய தகுதியுடையவர்களாக அங்கீகரிக்கப்படுவர்.

வெளிநாடுகளில் இருந்து வரும் கனேடியர்கள் போன்றே இரண்டு தடுப்பூசிகளையும் பெற்ற அமெரிக்கர்களுக்கும் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

கனடா மற்றும் அமெரிக்காவில் 12 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு எந்த தடுப்பூசிகளும் அங்கீகரிக்கப்படவில்லை என்பதால், தடுப்பூசி போடப்படாத 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுடன் வரும் பெற்றோர் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள்.

அத்துடன், கனடா வருவோர் தங்களை மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட விடுதிகளில் 3 நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டு, பி.சி.ஆர். பிரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு திங்கட்கிழமை முதல் நீக்கப்படுகிறது.

இதுவரை ரொராண்டோ, மொன்றியல், வான்கூவர் மற்றும் கல்கரி ஆகிய முக்கிய விமான நிலையங்கள் மட்டுமே சர்வதேச விமான பயண சேவையில் ஈடுபட அனுமதிக்கப்பட்டன. ஆனால் திங்கள்கிழமை முதல் ஹாலிஃபாக்ஸ், கியூபெக் சிட்டி, ஒட்டாவா, வின்னிபெக் மற்றும் எட்மண்டன் ஆகிய விமான நிலையங்களில் இருந்தும் சர்வதேச விமான சேவைகள் இடம்பெறும்.

முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் கூட கனடா வரும் 5 வயதுக்கு மேற்பட்ட அனைத்துப் பயணிகளும் அண்மையில் எடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

இதேவேளை, எல்லையை மீண்டும் திறந்து அமெரிக்கர்களை கனடா அனுமதிக்கும் அதேவேளை, அமெரிக்கா அதன் கனடாவுடனான எல்லைக் கட்டுப்பாட்டை ஆகஸ்ட் 21 வரை நீடித்துள்ளது.

இதேவேளை, செப்டம்பர் 7-ஆம் திகதி முதல் முழுமையாகத் தடுப்பூசி பெற்றுக்கொண்ட சர்வதேச பயணிகளுக்காக எல்லை மீண்டும் திறக்கப்படும் என கனடா அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post