(02 ஆம் இணைப்பு) தமிழ் அரசியல் கைதிகளை மிரட்டிய இராஜாங்க அமைச்சரைப் பதவி விலக பிரதமர் பணிப்பு!

இரண்டாம் இணைப்பு:

சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் மறுவாழ்வு இராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்தேயின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்த தகவலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய சிறைச்சாலை ஆணையாளருக்கு ஜனாதிபதி பணித்துள்ளதாக அறியமுடிகிறது.

இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு பணிப்பாளர் தனது கீச்சகத்தில் தெரிவித்துள்ளதாவது;

வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு பொறுப்பேற்று சிறை முகாமைத்துவம் மற்றும் சிறை மறுவாழ்வு இராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்தே பதவி விலகியுள்ளார்.

லோகன் ரத்வத்தே இன்று (15) இது குறித்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு எழுத்துமூலம் அறுவித்துள்ளார். ஜனாதிபதி பதவி விலகலை ஏற்றுக்கொண்டார் – என்றுள்ளது.

முதலாம் இணைப்பு:

சிறைச்சாலைகள் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்தே பதவி விலகியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ளார்.

சிறைச்சாலை முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்தேயை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உடனடியாக பதவி விலகுமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச அறிவுறுத்தியுள்ளார்.

இத்தாலிக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் தொலைபேசி ஊடாக இன்று முற்பகல் அவருக்குப் பணித்துள்ளார்.

பிரதமர் மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிறைச்சாலை ஆணையாளர் ஊடாக விசாரணைகளை முன்னெடுக்கும் அதேவேளை ரத்வத்தேயை பதவி விலக்க வேண்டும் என்று அவருக்கு அறிவித்துள்ளார்.

அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் நுழைந்து அரசியல் கைதிகள் இருவரை மண்டியிடவைத்து துப்பாக்கி காட்டி மிரட்டியதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

Previous Post Next Post