தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் நீடிப்பு!


நாட்டில் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு ஒக்டோபர் முதலாம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார்.

இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற கோவிட்-19 நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான செயலணியின் சிறப்புக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஓகஸ்ட் 20ஆம் திகதி இரவு 10 மணிக்கு நடைமுறைப்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு ஒரு மாத காலத்துக்கு மேலாக நீடிக்கப்பட்டு ஒக்டோபர் முதலாம் திகதி அதிகாலை 4 மணிவரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் கோவிட்-19 நோய்த்தொற்றுப் பரவல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக குறைவடைந்துள்ள போதும் திருப்திகரமான நிலையை எட்டவில்லை என்று மருத்துவ வல்லுநர்கள் முன்வைத்த கோரிக்கையை அடுத்து மேலும் ஒரு வார காலத்துக்கு ஊரடங்கை நீடிக்க ஜனாதிபதி ஒப்புதல் வழங்கினார் என்று தெரிவிக்கப்பட்டது.
Previous Post Next Post