பிரான்ஸில் வேலையில்லா இளைஞருக்கு மாதம் 500 ஈரோ! மக்ரோனின் புதிய உதவித் திட்டம்!!


  • குமாரதாஸன். பாரிஸ்.
தொழில், தொழில் பயிற்சி மற்றும் கல்வி வசதி இன்றி உள்ள இளையோருக்கு மாதாந்தம் 500 ஈரோக்கள் உதவி நிதிவழங்கும் திட்டம் ஒன்றை அதிபர் எமானுவல் மக்ரோன் இன்று அறிவித்திருக்கிறார்.

வாராந்தம் குறிக்கப்பட்ட மணித்தியாலங்கள் தொழில் பயிற்சி ஒன்றுக்கு உடன்படுகின்ற இளைஞர்களுக்கு இந்த நிதிகிடைக்கும். அதனை அவர்கள் தங்கள் கையில் பெற்றுக் கொள்ள முடியாது. அவர்கள் தெரிவுசெய்யும் பயிற்சி நிறுவனத்துக்கு அது பரிமாறப்படும்.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ள இந்தத்திட்டத்துக்கு பிரெஞ்சில் "Contrat Engagement Jeune" (Youth Engagement Contract) எனப் பெயரிடப்பட்டுள்ளது. 16 - 25 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள் இந்தத் திட்டத்தில் உள்வாங்கப்படுவர். வாராந்தம் 15-20 மணித்தியாலங்கள் தொழில் பயிற்சி ஒன்றை மேற்கொள்வதற்கு இந்த நிதிபரிமாறப்படும்.

"வளங்கள் மற்றும் வாய்ப்புகள் இல்லாமல் இருக்கின்ற இளைஞர்களின் குழப்பத்துக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்காக இந்தத் தொழில் பயிற்சி நிதி உதவித் திட்டம் தொடங்கப்படுவதாக அரசுத் தலைவர் மக்ரோன் தனது 'பேஸ்புக்' வலைத் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பயிற்சிக்குத் தெரிவு செய்யப்படும் இளைஞர்களது கல்வி வாய்ப்பு மற்றும் குடும்ப வருமான நிலைவரங்கள் கவனத்தில் எடுக்கப்படும். பயிற்சி பெறுகின்ற இளையோர் தொழில் ஒன்றைப் பெற்றுக் கொள்ள உடன்படாவிடில் இந்த உதவித் தொகை வழங்கும் உடன்படிக்கையில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட நேரிடும்.

இத்திட்டத்தின் மூலம் சுமார் நான்கு லட்சம் இளைஞர்கள் பயனடைவர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது இது தொடர்பான மேலதிக தகவல்கள் பின்னர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post