பிரான்ஸில் ஒமெக்ரோன் தொற்று உச்சம்! வருட இறுதி நாள் இரவு ஊரடங்கு?


  • குமாரதாஸன். பாரிஸ்.
பிரான்ஸில் ஒமெக்ரோன் வைரஸ் திரிபுபெரும் நோய் அறிகுறிகளைக் காட்டாமல் சகலரையும் பீடித்து வருகிறது. கடந்த சனியன்று ஒரு லட்சத்தைத் தாண்டி உச்சத்தை தொட்ட தொற்று எண்ணிக்கை நேற்று 28 ஆயிரங்களாகக் குறைந்தது.

நத்தாரை ஒட்டிய குடும்ப ஒன்று கூடல்களுக்கு முன்பாக மக்கள் பெருமெடுப்பில் தங்களை வைரஸ் சோதனைக்குட்படுத்துவதில் ஆர்வம் காட்டியதே தொற்று எண்ணிக்கை திடீரென உச்சங்களை எட்டக் காரணம் என்று கூறப்படுகிறது. 

ஆனாலும் அடுத்த வாரம் பாடசாலைகள் மீளத் திறக்கப்படும் போது தொற்று மேலும் எகிறும் என்று மருத்துவர்கள் எச்சரித்திருக்கின்றனர்.

பெரிய அளவில் இன்னமும் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்களாக இருக்கின்ற சிறுவர்கள் மத்தியில் தொற்று அதிகரிப்பதைத் தவிர்ப்பதற்காகப் பாடசாலைகளை ஆரம்பிப்பதை சில வாரங்களுக்கு ஒத்திப்போடுமாறு சுமார் ஐம்பது மருத்துவர்கள் அரசிடம் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பள்ளிகளில் வைரஸ் பெரும் அலையாகப் பரவுவது அதிக எண்ணிக்கையில் சிறுவர்கள் தொற்றுக்கு இலக்காகி மருத்துவமனைகளில் சேர்க்கப்படுகின்ற நிலைமையை உருவாக்கி விடலாம் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதற்கு முன்னர் ஏற்பட்ட வைரஸ் அலைகளை விட இந்த முறை சிறுவர்களும் இளவயதினரும் தொற்றுக்கு இலக்காகுவது அதிகரித்துள்ளது என்பதனை மருத்துவர்கள்உறுதிப்படுத்தியுள்ளனர்.

எனினும் எக்காரணம் கொண்டும் பள்ளிகளை மூடி வைக்கின்ற முடிவைத் தவிர்ப்பது என்ற கொள்கையில் கல்வி அமைச்சர் உறுதியாக இருந்துவருகிறார். இந்நிலையில் இன்று திங்கட்கிழமை மாலை அரசுத் தலைவர் மக்ரோன் வீடியோ வழியாக நடத்தவிருக்கின்ற சுகாதாரப் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இந்த விடயமும் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடைபெறவிருக்கின்ற அதிபர் தேர்தலில் மக்ரோனை எதிர்க்கின்ற பிரதான வேட்பாளராகிய வலெரி பெக்ரெஸ் உட்பட எதிர்க்கட்சி அரசியல் பிரமுகர்கள் சிலரும் பாடசாலைகளை ஆரம்பிப்பதைத் தாமதிக்குமாறு கேட்டிருக்கின்றனர்.

இன்றைய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் பாடசாலைகள் விடயத்துடன் வருட இறுதி நாள் கொண்டாட்டங்களைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் முன்னரைப் போன்று உணவகங்கள் அருந்தகங்களின் வெளி இருக்கைகளை மூடுவது குறித்தும் விவாதிக்கப்படலாம் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வருட இறுதி நாள் களியாட்டங்களைத் தடுப்பதற்காக பெரும்பாலும் டிசெம்பர் 31 திகதி இரவு ஊரடங்கை அமுல் செய்யும் யோசனையும் அரசிடம் உள்ளது என்று தகவல் வெளியாகியிருக்கிறது. நாட்டில் வாணவேடிக்கை நிகழ்வுகளுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருப்பது தெரிந்ததே.

தொழிலாளர்களது விடுப்புக் காரணமாக நாடு ஸ்தம்பிப்பதைத் தடுக்கும் ஒரு நடவடிக்கையாக தனிமைப்படுத்தல் நாட்களைக் குறைப்பதற்கும் உத்தேசிக் கப்பட்டுள்ளது. தொற்றாளர்களோடு தொடர்பு கொண்டவர்கள் தனிமையில் இருக்கவேண்டிய காலத்தைக் குறைப்பது குறித்து அரசு இன்று முடிவுகளை அறிவிக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Previous Post Next Post