யாழில் இரவில் பயணிப்போரிடம் வாள்களைக் காட்டிக் கொள்ளையிடும் கும்பல்! (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் இரவு வேளைகளில் வாள்களுடன் நடமாடும் குழு ஒன்று வீதிகளில் பயணிப்போரை அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபடும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் நிலையில் பொலிஸார் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளனர் என பாதிக்கப்பட்டவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு தகவல் வழங்கும் போதும் சம்பவ இடங்களுக்கு வருகை தர பொலிஸார் மறுப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கிக் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 7.30 மணியளவில் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து மீது கோப்பாய் சமிக்கை விளக்கு பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது.

கோப்பாய் சமிக்கை விளக்கு பகுதியில் பேருந்து தரித்து நின்றபோது அவ்விடத்துக்கு வந்த இருவர் முதலில் தாக்குதலை மேற்கொண்டனர்.

எனினும் குறித்த பேருந்தின் சாரதி திருப்பித்தாக்கத் தொடங்கிய போது அந்த குழுவில் வந்தவர்கள் இறங்கி பேருந்தை முந்திச்செல்ல முடியாதவாறு மெதுவாக மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றதுடன், தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதன் பின்னர் அந்த பகுதிக்கு மேலும் 6 பேர் அடங்கிய குழுவினர் மோட்டார் சைக்கிள்களில் வந்தனர்.

அங்கு வந்த குழுவினர் அந்த பேருந்தைத் தாக்கத் தொடங்கிய போது கோப்பாய் சமிக்கை விளக்குப் பகுதியிலிருந்த இராணுவத்தினர் உடனடியாக அந்த இடத்திற்குச் சென்று அவர்களைத் தடுக்க முற்பட்டனர்.

இதன்போது அந்த குழுவினர் இராணுவத்தினர் மீதும் தாக்குதல் நடத்தியது. இராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தத் தொடங்கியபோது அந்த குழுவினர் இடத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

எனினும் தப்பிச் சென்ற குழுவிலிருந்த ஒருவர் அப்பகுதியிலிருந்த இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார். அது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியபோதும் ஒன்றரை மணித்தியாலத்துக்கு மேல் சம்பவ இடத்துக்குக் கோப்பாய் பொலிஸார் வரவில்லை.

பின்னர் அழைப்புகள் மேற்கொள்ளப்பட்ட போதே கோப்பாய் பொலிஸார் அந்த இடத்திற்கு வந்தனர். பேருந்து சாரதி ஆசனத்திற்கு அருகில் வைக்கப்பட்டிருந்த 2 லட்சம் ரூபாய் பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளது எனப் பேருந்து உரிமையாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பேருந்து பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த தனியார் ஒருவருக்குச் சொந்தமானது. அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் இவ்வாறு வீதிகளில் பயணிப்போர் மற்றும் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தும் குழு, அவர்கள் கொண்டுவரும் பொருள்களை, பணத்தைக் கொள்ளை இட்டுச் செல்லும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கடந்த புதன்கிழமை சுன்னாகம் பகுதியிலிருந்து புத்தூர் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்த குடும்பத்தலைவர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளானார். அவர் பயணித்த முச்சக்கரவண்டியைக் கொள்ளைக்குழுவினர் நிறுத்தியுள்ளனர்.

அவர் முச்சக்கரவண்டியை நிறுத்தாமல் செல்ல முற்பட்ட போது, அந்த குழுவினர் அவரை தலைக்கவசத்தினால் தாக்கியதால் அவரது கையில் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post