IMF ஐ முன்னதாகவே நாடியிருக்க வேண்டும்: இரசாயன உரம் நிறுத்தப்பட்டமை தவறு - ஜனாதிபதி

இலங்கை மிகவும் முன்னதாகவே சர்வதேச நாணய நிதியத்தை நாடியிருக்க வேண்டும் என்று தான் நம்புவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை நியமனத்தின் பின்னர் நிகழ்த்திய விசேட உரையில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். அத்துடன், விவசாயிகளுக்கு இரசாயன உரம் வழங்காதது தவறு என்றும், அரசாங்கம் மீண்டும் இரசாயன உரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளால் மக்கள் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். அதுதொடர்பில் நான் மிகவும் வேதனையடைகிறேன்.

வாழ்க்கைச் செலவை தாங்கிக்கொள்ள முடியாமல் இருக்கும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொள்ள வரிசையில் நேரத்தை செலவிடுவதால் ஏற்படும் வருத்தம், கோபம் என்பன மிகவும் நியாயமானது.

கடந்த காலங்களில் எந்த குறைபாடுகள் ஏற்பட்டிருந்த போதும் நிகழ்கால சவால்களை எதிர்கொள்வதும் சிக்கல்களை முகாமைத்துவம் செய்வதும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியாகிய எனது கடமையாகும்.

எந்தவித சவால்களுக்கும் முகம் கொடுக்காமல் நான் பின்வாங்க மாட்டேன் என மக்களுக்கு உறுதியளிக்கிறேன் என்றார்.
Previous Post Next Post