அஸூர் எயார், ஏர் பிரான்ஸ், சுவிஸ் நிறுவனங்கள் இலங்கைக்கு மீண்டும் சேவைகளை ஆரம்பிக்கின்றன!

ரஷ்யாவின் மிகப்பெரிய வர்த்தக விமான நிறுவனமான அஸூர் எயார் மற்றும் பிரான்சின் எயார் பிரான்ஸ், இந்த வாரம் முதல் இலங்கைக்கான விமான சேவைகளை தொடங்கவுள்ளதாக சுற்றுலாத்துற அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, அஸூர் எயார் இன்று(03) முதல் இலங்கைக்கான விமானங்களைத் முன்னெடுக்கும் அதேவேளையில் எயார் பிரான்ஸ் நாளை(04) முதல் சேவைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதனிடையே, சுவிட்சர்லாந்தின் தேசிய விமான நிறுவனமான சுவிஸ் இன்டர்நேஷனல் எயார்லைன்ஸ், எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் மே 2023 வரை வாராந்திர விமானங்களுடன் மீண்டும் இலங்கைக்கான தமது சேவையை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ட்விட்டர் செய்தியொன்றில் தெரிவித்துள்ளார்.

இது இந்த பருவ காலத்தில் ஐரோப்பிய சுற்றுலா பயணிகளின் வருகையை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குத்தகை நிறுவனத்துடனான தகராறு காரணமாக நீதிமன்ற உத்தரவின்பேரில் ரஷ்யாவின் ஏரோஃப்ளொட் நிறுவனத்தின் விமானமொன்று இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டது.

இதனால், குறித்த நிறுவனம் ஜூன் முற்பகுதியிலிருந்து இலங்கைக்கான தமது சேவைகளை இடைநிறுத்தியது.

எவ்வாறாயினும், நீதிமன்றம் விரைவாக விமானத்தை விடுவித்ததுடன், இலங்கை அரசாங்கம் இனிமேல் நாட்டில் இது போன்ற எந்த செயற்பாடுகளையும் முன்னெடுக்காது என்று உத்தரவாதம் அளித்த போதிலும், ரஷ்ய விமான நிறுவனங்கள் நாட்டுக்கு விமான சேவைகளை முன்னெடுக்க தயக்கம் காட்டின.

இந்த நிலையில், ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் கடந்த மாதம் மொஸ்கோவிற்கும் கொழும்புக்கும் இடையிலான விமான சேவைகளை 4 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது.

இதற்கிடையில், எயார் பிரான்ஸ் மற்றும் கேஎல்எம் ஏர்லைன்ஸ் கொழும்புக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்கும் என்றும், அந்த விமான நிறுவனங்கள் வாராந்தம் நான்கு விமானங்களை இலங்கைக்கு இயக்கும் என்றும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அண்மையில் ட்வீட் செய்திருந்தார்.
Previous Post Next Post