மக்களின் பணத்தைக் கொள்ளையடித்து வயிறு வளர்க்கும் பிரான்ஸ்-லாச்சப்பல் தமிழ் வர்த்தகர்கள்!

பிரான்ஸ் என்றாலே அங்கே நம்மவர்கள் அதிகமாக வாழும் நாடு என்றாகி விட்டது. அந்தளவுக்கு அங்கு யாழ்ப்பாணத் தமிழ் மக்களின் எண்ணிக்கை அதிகமாகவேயுள்ளது.

அத்துடன், பிரான்ஸில் லாச்சப்பல் என்ற இடத்தை யாழ்ப்பாணத் தமிழர்கள் தனிநாடாக்கி விட்டதுபோன்று, அது ஒரு குட்டி யாழ்ப்பாணமாகக் காட்சி தரும்.

அப் பகுதிகளில் பெரும்பாலான யாழ்ப்பாணத் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் உள்ளதாலும் அங்கே பெரும்பாலும் யாழ்ப்பாணப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாலும் அப் பகுதி எங்கும் தூய தமிழ் நித்தமும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும்.

ஊரில் உள்ள உணவுகளை உண்டு மகிழ்வதற்காகவே பிரான்ஸின் பல இடங்களிலிருந்தும் அங்கு தமிழ் மக்களின் வருகை அதிகமாகவே காணப்படும்.

ஆனால் தற்போது எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த லாச்சப்பால் இன்று வெறிச்சோடிக் காணப்படுகின்றது.

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உள்ளிருப்புச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள வர்த்தக நிலையங்கள் பெரும்பாலும் மூடப்பட்டு, ஓரிரு கடைகள் மாத்திரம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இது எல்லாவற்றையும் தாண்டி, இவ்வாறு திருந்திருக்கும் வர்த்தகப் பெருமக்கள் செய்யும் திருகுதாளங்களுக்கு கணக்கே கிடையாது.
அதாவது, இக் கொரோனாச் சூழ்நிலையினைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட வர்த்தகர்கள் தங்கள் கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு பல மடங்கு அதிக விலை வைத்து விற்பனை செய்வது வாடிக்கையாளர் மத்தியில் பெரும் ஆத்திரத்தை உண்டுபண்ணியுள்ளது.

அதுவும் தொழில் வாய்ப்புக்கள் இழந்த நிலையில், நிர்க்கதியாகியுள்ள மக்களிடம் இவ்வாறு புடுங்கி தங்கள் வயிற்றை வளர்க்கும் இவ்வாறான வர்த்தகர்கள் தொடர்பில் பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் தங்கள் ஆதங்கங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

தற்கால சூழலில் தொழில் வாய்ப்புக்களை இழந்து, வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்ல முடியாதவர்களுக்கு எத்தனையே சமூகத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்டவர்கள் மனிதாபிமான உதவிகளைப் புரிந்து வருகின்றனர்.

ஆனால் இவ் வர்த்தகர்கள், எந்த மக்களினால் தங்கள் வருமானங்களை ஈட்டி, தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொண்டார்களோ, அந்த மக்களின் பணத்தைச் சுரண்டி தங்களின் வயிற்றை வளர்த்துக் கொள்கின்றனர்.

அதிலும், தங்களின் கடைகளில் விசா இன்றி, பதியப்படாது பணியாற்றிய எத்தனையோ தமிழ் இளைஞர்களின் வாழ்க்கையைக் குழி தோண்டிப் புதைத்துள்ளனர்.

அவர்களுக்கான மிகுதி சம்;பள பணத்தை வழங்காது, அவர்களை பட்டினி போட்டு தங்களின் வங்கிக் கணக்குகளை நிரம்பியுள்ளனர் என்பது வேதனையிலும் வேதனையே.

ஏற்கனவே குறித்த வர்த்தக நிலையங்களில் பணியாற்றிய விசா இல்லாத இளைஞர்களுக்கு நாள் ஒன்றுக்கு பத்து மணித்தியால நேர வேலையும், ஒரு நேரச் சாப்பாட்டுடன் 30 யூரோக்களும் வழங்கப்படுகின்றது.

இவ்வாறு தங்கள் கடைகளில் பணியாற்றிய இளைஞர்களைக் கசக்கிப் பிழிந்து இலாபம் ஈட்டியவர்கள், தற்போது அதே இளைஞர்கள் வேலையின்றி வறுமையில் வாடும்போது உதவி செய்யலாம் என்பதே அங்குள்ள தமிழர்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.

ஆகவே இனிவருங்காலங்களில் நிலைமை சுமுகமாக வரும்பட்சத்தில், வழமைபோன்று லாச்சப்பல் இயங்க ஆரம்பிக்கும் போது, இவ்வாறான விலை அதிகரிப்புச் செய்த அனைத்து வர்த்தக நிலையங்களையும் மக்கள் புறக்கணிப்பதே அவர்களுக்கு நீங்கள் வழங்கும் தண்டனையாக இருக்க முடியும்.

அதேநேரம் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் வர்த்தகப் பெருமக்கள் இன்றைய இக்கட்டான சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு நீங்களும் பாதிக்கப்படாது, உங்களை நம்பி வரும் வாடிக்கையாளருக்கும் ஒரு நியாயமான விலையினை நிர்ணயித்து வியாபாரம் செய்வதுடன், உங்களின் வர்த்தக நிலையத்தில் இத்தனை காலமும் பணியாற்றிய இளைஞர்களுக்கும் உங்களால் ஆன உதவிகளைச் செய்வது உங்களதும் உங்கள் குடும்பத்தினரதும் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமானதாக அமையும்.
Previous Post Next Post