யாழில் உள்ள மனைவியைப் பார்க்க முடியாத சோகத்தில் கணவன் தீ மூட்டித் தற்கொலை!

ஊரடங்குச் சட்டம் காரணமாக யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சிக்கு சென்ற குடும்பஸ்தர் தனது மனைவி, பிள்ளைகளை பார்க்க முடியாத விரக்தியில் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்குத் தானே தீ மூட்டி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் அளவெட்டி தெற்கு பகுதியை சேர்ந்த செல்லத்துரை அண்டனி (60 ) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் அளவெட்டியில் வசித்து வரும் குறித்த குடும்பத் தலைவர் கிளிநொச்சி நகரத்தில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு அண்மையில் சென்றுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக மாவட்டம் விட்டு மாவட்டம் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நீண்ட நாட்களாக தனது மனைவியையும், நான்கு பிள்ளைகளையும் பார்க்க முடியாத விரக்தியில் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று (03) திடீரென தனது சகோதரியின் வீட்டிற்கு முன்னால் உள்ள வெற்றுக் காணிக்குள் தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டி உள்ளார்.

இதனை அவதானித்த அயலவர்கள் உடனடியாக அவரை மீட்டு முழங்காவில் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Previous Post Next Post