அம்மன் கடந்த வியாழக்கிழமை(21) கண் திறந்து அருள்பாலித்த காட்சி |
இந்நிலையில் அம்மனின் கண்கள் மூடிப் பின்னர் மீண்டும் திறந்துள்ளதாக ஆலய நிர்வாகத்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மறுநாள் வெள்ளிக்கிழமை(22) காலை-07 மணியளவில் மூலஸ்தானத் திருக்கதவு திறக்கப்பட்டு ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ சோ. சத்தியமூர்த்திக் குருக்களினால் பிராயச் சித்த அபிஷேகம், பூசை வழிபாடுகள் நிகழ்த்தப் பெற்றன.
அதனைத் தொடர்ந்து காலை-08 மணியளவில் அம்மனின் கண் மீண்டும் மூடப் பெற்றது. அன்றைய தினம் பிற்பகல்-03.30 மணி முதல் ஆலய முன்றலில் விசேடமாகப் பொங்கல் பொங்கி சிறப்பு வழிபாடுகளும் இடம்பெற்றன.
இந்நிலையில் அம்மனின் அற்புதத்தை அறிந்து அவளைத் தரிசனம் செய்வதற்காக வருகை தந்த பல அடியவர்களின் வேண்டுகோளுக்கிணங்க வெள்ளிக்கிழமை மாலை-06.30 மணி வரை மூலஸ்தானத் திருக்கதவு திறந்திருந்தது.
அம்மனின் கண் மூடிய தருணம் |
அன்றைய தினம் நள்ளிரவு-12 மணி வரை அம்மனின் கண் திறந்திருந்த அற்புதக் காட்சியைத் தான் பார்வையிட்டுச் சென்றதாகவும் மறுநாள் சனிக்கிழமை அதிகாலை- 04.45 மணியளவில் மீண்டும் ஆலயத்திற்கு வருகை தந்து பார்த்த போது அம்மன் கண் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி விட்டதாகவும் மேற்படி ஆலய நிர்வாகச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
மேற்படி ஆலய மூலஸ்தான அம்மன் கண் திறந்தமை தொடர்பில் மேற்படி ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ சோ. சத்தியமூர்த்திக் குருக்களிடம் வினாவிய போது அவரும் அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், வேம்படி ஸ்ரீ நாகபூசணி அம்மன் கண் திறந்து அருள் பாலித்த அற்புதத்தை தொடர்ந்தும் நினைவுபடுத்தும் வகையில் மேற்படி ஆலயத்தின் முன்பாகவுள்ள மண்டபத்தில் ஒளிப்படங்களைத் தாங்கிய பதாதைகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அம்மன் கண் திறந்து அருள்பாலித்த அற்புதத்தைக் கேள்வியுற்று ஊரடங்கு தளர்ந்திருந்த கடந்த வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை ஆகிய தினங்களில் கிராமத்தவர்கள் மாத்திரமன்றி ஏழாலை, குப்பிழான், புன்னாலைக்கட்டுவன், சுன்னாகம், ஊரெழு, உரும்பிராய் உள்ளிட்ட அயற் கிராமத்தவர்களும், பருத்தித்துறை, கொடிகாமம், சாவகச்சேரி, பளை உள்ளிட்ட தூரவிடங்களிலிருந்தும் பெருந்திரளான மக்கள் ஆலயத்திற்கு வருகை தந்து தரிசனம் செய்து சென்றுள்ளனர்.
தூரவிடங்களிலிருந்து வருகை தந்தவர்கள் அனைவரும் தாம் யாழிலிருந்து வெளிவரும் பத்திரிகைகள் மற்றும் இணைய ஊடகங்கள் மூலம் அம்மன் கண்திறந்து அற்புதம் நிகழ்த்திய செய்தியறிந்து வருகை தருவதாகத் தெரிவித்திருந்தனர்.
ஆலயத்திற்கு வருகை தந்த மக்களில் பலரும் தமது வாழ்வில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள், குறைகள் தீர நேர்த்திகள் வைத்து வழிபாடாற்றியமையையும் காண முடிந்தது.
இதேவேளை, மயிலங்காடு ஸ்ரீ நாகபூசணி அம்மன் கண் திறந்து அருள் பாலித்தமை தொடர்பில் மேற்படி ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ சோ. சத்தியமூர்த்திக் குருக்கள் எமது செய்திச் சேவைக்கு விசேடமாகத் தெரிவித்துள்ள கருத்துக்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள காணொளியில் நீங்கள் காணலாம்.