யாழில் கொரோனாக் கட்டுப்பாடுகளால் உயிரிழக்கும் ஆபத்தில் ஏனைய நோயாளர்கள்!

யாழில் காய்ச்சலால் அவதியுற்ற இளைஞனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்காக அம்புலன்ஸ் வண்டிக்கு அழைத்தபோது பொறுப்புணர்வற்ற முறையில் பதில் வழங்கப்பட்டுள்ளதுடன் அம்புலன்ஸ் வண்டி வழங்கவும் மறுப்பு தெரிவித்தமை தொடர்பாக வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளரிற்கு பகிரங்க கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது.

பொன்னாலை சமூக செயற்பாட்டாளரும் பிரதேச சபை உறுப்பினருமான ந.பொன்ராசாவால் எழுதப்பட்ட அந்த பகிரங்க கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பொன்னாலையில் வசிக்கும் இளைஞர் ஒருவருக்கு கடந்த நான்கு நாள்களாக காய்ச்சல். நேற்று முன்தினம் தொல்புரம் மத்திய மருந்தகத்தில் சிகிச்சை பெற்றார். நேற்று பிற்பகல் மாவடியில் உள்ள தனியார் வைத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்றார்.

இன்று (02) சனிக்கிழமை அவருக்கு காய்ச்சல் அதிகரித்தது. கூடவே நடக்க முடியாத நிலையும் ஏற்பட்டது. ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது. வைத்தியசாலைக்கு செல்ல முடியவில்லை. எனக்கு அழைப்பை ஏற்படுத்தினார்கள். அங்கு சென்றேன். அவரை அம்புலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு முயற்சி எடுத்தோம்.

பிரதேசத்திற்குரிய பொதுச் சுகாதார பணிப்பாளருக்கு காலை 10.17 மணிக்கு அழைப்பு எடுத்து விடயத்தைக்கூறிவிட்டு, அவரது ஆலோசனைக்கு ஏற்ப 10.19 மணிக்கு 1990 துரித அம்புலன்ஸ் சேவைக்கு அழைப்பு எடுத்தேன். அவர்கள் வேறு சில உள்ளக அலுவலகங்களுக்கு மாற்றினர். கொரோனா கட்டுப்பாட்டு நிலையத்திற்கும் அழைப்பு சென்றது. சில நிமிட நேர உரையாடல்களுக்கு பின்னர் 1330 இற்கு அழைக்குமாறு கூறினர்.

அதற்கு அழைப்பு எடுத்தேன். அங்கும் சில உள்ளக இலக்கங்களை அழைக்குமாறு கூறினர். அந்த அழைப்பினூடாக இறுதியாக 1990 இல் ஒருவர் உரையாடினார். நோயாளி தொடர்பான சகல விபரங்களையும் அவருக்கு கூறினேன். தான் நோயாளியுடன் கதைக்கவேண்டும் என்றார். அவர் என்னை சந்தேகப்படுகின்றார் என கருதிய நான், என்னைப்பற்றி கூறினேன். நோயாளி வீட்டினுள்ளே படுத்திருக்கின்றார் என்றேன். ஏன் இப்படி கேட்கின்றீர்கள். நாங்கள் அம்புலன்ஸ் சேவை தானே கேட்கின்றோம் என்றேன். நான் யார் கதைக்கிறேன் தெரியுமா? என சடுதியாக குரலை மாற்றி கேட்டார். நீங்கள் வைத்தியராக இருக்கலாம் என்றேன். நான் நோயாளியுடன் கதைத்த பின்னர்தான் அம்புலன்ஸ் விடுவதா இல்லையான என தீர்மானிக்கலாம் என்றார். அவரது வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நான் நோயாளியிடம் தொலைபேசியை கொடுத்தேன். அதற்குள் 1990 இல் பேசிய நபர் தொலைபேசியைத் துண்டித்துவிட்டார்.

நடைபெற்ற விடயங்களால் ஏமாற்றமும் கவலையும் ஆத்திரமும் அடைந்த நான் 10.45 மணிக்கு வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைப்பு மேற்கொண்டு நடைபெற்ற விடயங்களைக் கூறினேன். அங்கு இருந்த ஒருவர் சிறிது நேரத்தில் மீண்டும் எனக்கு அழைப்பு எடுப்பதாக கூறினார்.

அதற்கிடையே 10.53 இற்கு சங்கானை சுகாதார வைத்திய அதிகாரியை தொடர்புகொண்டு விடயத்தை தெரியப்படுத்தினேன். அவர் பொதுச் சுகாதார பரிசோதகரை நோயாளியின் வீட்டுக்கு அனுப்புவதாக கூறினார். 10.58 இற்கு வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து மருத்துவர் திரு.பரமேஸ்வரன் அவர்கள் எனக்கு அழைப்பு எடுத்தார். விடயங்களைக் கேட்டறிந்தார். இதனிடையே அம்புலன்ஸ் வராமையால் ஏமாற்றமடைந்த குடும்பத்தினர் எங்கோ ஒரு இடத்தில் நின்ற முச்சக்கரவண்டிக்கு அழைப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்தனர்.

இந்த விடயத்தை நான் வைத்தியர் பரமேஸ்வரன் அவர்களுக்கு கூறினேன். வேறு வைத்தியசாலைகளுக்கு அழைப்பை எடுத்துத்தான் அம்புலன்ஸ் அனுப்பு முடியும் என கூறிய அவர், நோயாளி முச்சக்கரவண்டியில் சென்றுவிட்டாரா என்பதை தனக்கு அறியத்தருமாறு கூறினார். இதனிடையே 11.01 இற்கு பொதுச் சுகாதார பரிசோதகர் நோயாளியின் வீட்டுக்கு வந்துவிட்டார். அவர் துரித அம்புலன்ஸ் சேவைக்கு அழைப்பு எடுத்தார். அது பலனளிக்கவில்லை. அதனிடையே அனுமதிப்பத்திரம் இல்லாத முச்சக்கரவண்டி ஒன்று வந்துவிட்டது.

முச்சக்கரவண்டியில் வட்டுக்கோட்டை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு செல்வது என முடிவெடுத்து, பொதுச் சுகாதார பரிசோதகர் வட்டுக்கோட்டை வைத்தியசாலைக்கு அழைப்பு எடுத்தார். அவர்கள் சங்கானைக்கு கொண்டுசெல்லுமாறு கூறினர். சங்கானை வைத்தியசாலைக்கு அழைப்பு எடுத்து விடயத்தைக் கூறியபோது, நான்கு நாள் காய்ச்சல் உள்ள நோயாளிக்கு சிகிச்சை அளிக்க அங்கு வசதி இல்லை எனக்கூறி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு கூறினர்.

இதனிடையே கடும் பிரயத்தனத்தின் மத்தியில், ஒருவாறு 11.47 மணியளவில் அம்புலன்ஸ் வாகனம் வந்து சேர்ந்தது. வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் நின்ற அம்புலன்ஸ் வாகனம் 4 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள பொன்னாலைக்கு வந்து, அதில் நோயாளியை ஏற்றி அனுப்புவதற்கு ஒன்றரை மணிநேரம் தொலைபேசியில் போராடவேண்டி இருந்தது.

இதற்கு யார் பொறுப்பு? இந்த நிலைமைக்கு பதில் கூறவேண்டியவர்கள் யாவர்? இந்த ஒன்றரை மணிநேரத்தில் நோயாளிக்கு ஏதும் நடந்துவிட்டால் அவரது குடும்பத்திற்கு பொறுப்புக்கூறவேண்டியவர்கள் யாவர்?

இதுவே,
1.பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருக்கும் ஒரு கர்ப்பவதி,
2.குழந்தை பிறந்து இரத்தப்போக்கு அதிகரித்துள்ள ஒரு தாய்,
3.விபத்தில் படுகாயமடைந்துள்ள ஒருவர்,
4.மாரடைப்பு உள்ள ஒருவர்,

இவ்வாறு தீவிர நிலையில் உள்ள நோயாளியாக இருந்திருந்தால் இன்று நிலமை என்னவாகியிருக்கும்? அராலியில் அண்மையில், அம்புலன்ஸ் வாகனம் செல்லாத காரணத்தால் இளைஞன் ஒருவன் உயிரிழந்தார். இதேபோன்று மேலும் சில சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இவற்றுக்கு என்ன தீர்வு?

கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கு மருத்துவத்துறை கடுமையாக போராடிக்கொண்டிருப்பதை அனைவரும் அறிவர். அப்பணியில் ஈடுபட்டிருக்கும் வைத்தியர்களையும் அத்துறை சார்ந்தோரையும் மதிக்கவேண்டும், கௌரவப்படுத்தவேண்டும். அதற்காக, கொரோனாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடு என்ற பெயரில் ஏனைய நோயாளிகளை கவனிக்காமல் சாகவிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இதற்கு விரைந்து தீர்வு காணப்படவேண்டும். யாழ்ப்பாணத்திலோ, வடக்கிலோ மட்டுமல்ல, எந்த இடத்திலும் இனிமேல் இவ்வாறாதொரு சம்பவம் நடைபெறக்கூடாது. இதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Previous Post Next Post