எயார்டல் நிறுவனத்தின் ஊழியர்களால் நெல்லியடியில் மதுபானங்கள் கடத்தல்! (படங்கள்)

நெல்லியடிப் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட வீதிச் சோதனை நடவடிக்கைகளின் போது அனுமதிப் பத்திரமின்றி பெருமளவான மதுபானப் போத்தல்கள் கொண்டு சென்றனர் என்ற குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லியடிப் பொலிஸார் தமது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை வீதிச் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போதே இந்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பெருமளவான மதுபான போத்தல்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நெல்லியடி பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் ஆய்வாளர் ஜெனார்த்தனன் தலைமையிலான பொலிஸ் குழுவினரே இக் கைது நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

தனியார் தொலைத் தொடர்பு நிறுவனமான எயார்டல் நிறுவனத்தின் ரீசேட் அணிந்த கொண்டு, எயாா்டல் நிறுவனத்தின் நெல்லியடிப் பிராந்திய முகாமையாளரின் வாகனத்திலேயே மேற்படி மதுபானப் போத்தல்கள் கடத்தப்பட்டுள்ளது.

நெல்லியடி, வதிரி வீதியில் அமைந்துள்ள றீகல் வைன் ஸ்ரோர் எனும் மதுபானக் கடையில் இருந்தே குறித்த மதுபானப் போத்தல்கள் கடத்தப்பட்டுள்ளது. குறித்த மதுபானக் கடையின் முதலாளி, எயார்டல் நிறுவனத்தின் நெல்லியடிப் பிரதேச ஏக விநியோகஸ்தர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே இது தொடர்பில் உரிய அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதுடன், எயார்டல் நிறுவனத்தின் ஊழியர்களால் மதுபானங்கள் கடத்தப்படுவது தொடர்பில் அந் நிறுவனம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

Previous Post Next Post