பிரான்ஸ் நாட்டை உலுக்கிய இளம் பெண்ணின் படுகொலை! நீடிக்கும் மர்மம்!! நடந்தது என்ன? (படங்கள்)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
வீல்பொந்தன் (Villefontaine) கிராமத்துக்கு அருகே நவீன கடைத் தொகுதிகள் நிறைந்த வணிக வளாகத்தில் சனிக்கிழமை மாலைப்பொழுதை தனது சிநேகிதிகளுடன் கழித்துவிட்டு வீடு திரும்ப ஆயத்தமானாள் விக்ரோறின். 

அப்போது ஏழு மணி ஆகியிருந்தது. மழைநாள் வேறு. சில கிலோமீற்றர்கள் தூரம்தான் என்றாலும் வீடு செல்வதற்கு இரண்டு பஸ்களைப் பிடிக்கவேண்டும். முதல் பஸ்ஸில் ஏறி இரண்டாவது பஸ்ஸைப்பிடிப்பதற்கான தரிப்பிடத்தில் இறங்கிய போது வீடுவரை செல்லும் பஸ் புறப்பட்டுச்சென்றிருந்தது. 

அடுத்த பஸ் வர நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு மேல் எடுக்கும்.அதற்குள் இருண்டுவிடும். அதுவரை காத்திருக்காமல் வீட்டுக்கு நடந்து செல்லத் தீர்மானிக்கிறாள். கூட வந்த தோழிகள் சிலர் வீடுவரை வந்து அவளை விட்டுச் செல்வதாகக் கேட்கின்றனர். பழக்கப்பட்ட பாதைதான். தனியே போகிறேன் என்று கூறிவிட்டு புறப்படுகிறாள் விக்ரோறின்.

அவளோடு வெளியே செல்வதற்காக வீட்டில் அவளது சகோதரி காத்திருக்கிறாள். எனவே அவசரமாக நடக்கிறாள். 

தாயாரை தொலைபேசியில் அழைத்து பஸ்ஸை தவறவிட்டதால் நடந்து வருவதாகக் கூறுகிறாள். தனது நண்பி ஒருத்திக்கும் அழைப்பு எடுக்கிறாள். தனது மொபைல் போனில் சார்ஜ் குறைந்துவிட்டது. இனி அழைக்க முடியாமல் போகலாம் என்ற தகவலைக் கூறுகிறாள். 

பிரதான வீதியைத் தவிர்த்து மரங்கள் அடர்ந்த காட்டுப்பகுதியை குறுக்கே நடந்து கடந்தால் கொஞ்ச நேரத்தில்- முப்பது நிமிடங்களில் - வீட்டைச் சென்றடைந்து விடலாம்.அதுவே அவளது எண்ணமாக இருந்திருக்க வேண்டும். ஒடுங்கிய - புதர்கள் நிறைந்த-காட்டுப் பாதையூடாக நடக்கத் தொடங்கினாள்.
இரவு ஒன்பது மணி ஆகிவிட்டிருந்தது.

நடந்துவருகிறேன் எனக் கூறிய விக்ரோறின் வீடுவந்து சேரவில்லை.அழைப்புக்கு பதிலும் இல்லை. பதற்றமடைந்த குடும்பத்தினர் பொலீஸ் அவசர சேவைக்குத் தகவல் சொல்லுகின்றனர்.

கிராமம் முழுவதும் தகவல் பரவுகிறது. இரவு நேரம் என்பதால் அனைவரும் பதற்றமடைகின்றனர். உஷார் அடைந்த பொலீஸ் ஜொந்தாமினர் உடனடியாகவே தேடுதலை தொடங்குகின்றனர்.

கடைசியாக விக்ரோறின் பஸ் தரிப்பிடத்தில் இருந்து காட்டுப் பாதைவழியே நடந்து செல்வதைக் கண்டதாகச் சாட்சி ஒருவர் தகவல் சொல்கிறார்.அதை விட வேறு எந்தத் தகவலும் இல்லை. உடனடியாகவே மோப்ப நாய்களின் உதவியுடன் அப்பகுதி எங்கும் தேடுகிறது பொலீஸ். 

மறுநாள் ஞாயிற்றுக்கிழமையும் காட்டுப் பகுதியில் ஹெலிகள் மற்றும் ட்ரோன்களின் உதவியுடன் விடாது தேடுதல் தொடர்கிறது. விக்ரோறின் கண்டுபிடிக்கப்படவில்லை.

செப்ரெம்பர் 28 திங்கள் காலை காட்டை அண்டிப் பரந்த நிலப்பரப்பில் அமைந்துள்ள பெரும் நீர் நிலை ஒன்றின் அருகே 'மாஸ்க்', காலணிகள் , கைப்பை போன்ற பொருள்களை பொலீஸ் மோப்ப நாய்கள் முகர்ந்து பிடிக்கின்றன.

சற்று நேரத்தில் மரக்கிளைகள், புதர்கள் மண்டிய அந்த இருண்ட நீர்நிலையில், இலகுவில் எட்ட முடியாத ஒரு பகுதியில் இருந்து, விக்ரோறினின் உடல் சுழியோடிகளால் மீட்கப்படுகிறது.

காணாமற் போன யுவதி உயிரிழந்த செய்தி வேகமாகப் பரவுகிறது. வீல்பொந்தன் வாசிகள் மட்டுமன்றி நாட்டு மக்கள் அனைவருமே பெரும் அதிர்ச்சி அடைகின்றனர். 

நீருக்குள் சடலம் கிடந்த கோணமும் அருகே தரையில் அவளது உடைமைகள் சிதறிக்கிடந்த விதமும் அது ஒரு விபத்து அல்ல என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி உணர்த்துகின்றன. தடயவியல் நிபுணர்களும் புலனாய்வாளர்களும் அவ்விடத்தில் குவிகின்றனர்.

முதலாவது பிரேத பரிசோதனை நீரில் மூழ்கியதால் ஏற்பட்ட மரணம் என்பதை தெளிவாகக் காட்டுகிறது. ஆனால் "மூன்றாவது தரப்பு" ஒன்றினால் அவள் பலவந்தமாக மூழ்கடிக்கப்பட்டிருப்பதை உடலின் உட்பகுதிக் காயங்கள் வெளிப்படுத்துகின்றன என்று அரச சட்டவாளர் அறிவிக்கிறார்.நீரில் கிடந்த சடலத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான தடயங்கள் எதுவும் உடனடியாகக் கண்டுபிடிக்கப்படவில்லை. 

எனினும் உடற்கூற்றுப்பரிசோதனைகள் தொடர்ந்து நடக்கின்றன. நீண்ட நேரம் தண்ணீரில் கிடந்ததால் சடலத்தில் கைரேகைகள், டிஎன்ஏ தடங்களைக் கண்டுபிடிப்பது நிபுணர்களுக்குப் பெரும் சவாலாகிறது. 

தடயவியலாளர்கள் காடு முழுவதையும் சல்லடை போடுகின்றனர். எந்தத் தடயமும் சிக்கவில்லை. ஊர் முழுவதும் துப்புத் தேடி நூற்றுக்கணக்கானவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

வீடுகளோ, மின் ஒளி வசதியோ கண்காணிப்புக் கமராக்களோ எதுவும் இல்லாத அந்தக் காட்டுப் பாதையை ஊரவர்கள் பயன்படுத்துவது மிகஅரிது. அவசரத்துக்கு எப்போதாவது சிலர் அதனை தாண்டிச் செல்வர்.அவ்வளவுதான். ஆள்நடமாட்டம் அற்ற அந்தப்பகுதி குறித்து ஒருவித அச்ச உணர்வு அங்கு உள்ளது.

குறிப்பிடும் படியான குற்றச் செயல்கள் எதுவும் இடம்பெற்றிராதபோதிலும் அந்தக் காட்டுப் பகுதியை உள்ளூர் வாசிகள் "le coupe-gorge" என்றே அழைக்கின்றனர். 

"le coupe-gorge" என்பது பிரெஞ்சு மொழியில் "கழுத்தறுப்பு" என்ற அர்த்தத்தைத் தருவது. அந்தப்பகுதியை "கழுத்தறுப்புக் காடு" என்றே பலரும் அழைத்து வந்திருக்கின்றனர் என்பது இப்போது தெரியவருகிறது. ஆளரவம் இல்லாத அந்தக் காட்டுக்குள் வைத்து படுகொலையைப் புரிந்தவர்கள் யார்?

முழுநேர விசாரணையாளர்கள் பத்துப் பேர், மூன்று விசேட வழக்கறிஞர்களின் கீழ் 24மணிநேரமும் துருவிக்கொண்டிருக்கின்றனர்.

லியோன் நகரில் இருந்து சுமார் 30 கிலோ மீற்றர்கள் தொலைவில் உள்ள Isère மாவட்டத்தின் நுழைவாயிலிலேயே விக்ரோறினியின் சொந்தக் கிராமமான வீல்பொந்தன் (Villefontaine) அமைந்துள்ளது. அமைதியான அந்தக் கிராமத்தில் திரும்பிய திசை எங்கும் பெரும் சோகம் கவிந்திருக்கிறது. ஒருவித அச்ச உணர்வும் பரவியுள்ளது. 

18 வயதான இளம் பல்கலைக்கழக மாணவி விக்ரோறின் (Victorine Dartois) சுமார் 19 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கும் அந்தக் கிராமத்தில் பலரினதும் கவனத்துக்கும் பிரியத்துக்கும் உரிய பெண். 

"அழகும் அனைவரையும் கவரும் தன்மையும் கொண்டவள் விக்ரோறின். பயந்த சுபாவமுடையவள். ஆனால் எல்லோருக்கும் உதவிக்கு முன்நிற்பாள். இலகுவில் எவரையும் அணுகமாட்டாள். சண்டை சச்சரவுகளில் சிக்காதவள். அறிமுகமற்ற எவருடனும் எங்காவது செல்லக் கூடிய துணிச்சல் கொண்டவளும் அல்ல " இவ்வாறு விக்ரோறினின் குடும்பத்தினரும் நண்பிகளும் விம்மி வெடித்து வரும் அழுகையை அடக்கியவாறு கூறிக்கொள்கின்றனர். 

" யாரோ தெரிந்தவர்கள்தான் அவளை அணுகி இதனைப் புரிந்திருக்க முடியும்" என்றும் சிலர் ஐயம் எழுப்புகின்றனர். அவளது மொபைல் போனின் கடைசி அழைப்புகள், அதன் நகர்வுகள், 'சற்றிங்' போன்ற அவளது டிஜிட்டல் தொடர்பாடல்களை அறிவியல் பொலீஸ் நிபுணர்கள் ஆழமாக ஆராய்கின்றனர்.
இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டவர் அல்லது சம்பந்தப்பட்டவர்கள் யார்?எதற்காக விக்ரோறின் கொல்லப்பட்டாள்? 

இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் முக்கிய தடயங்களோ தகவல்களோ இன்னும் கிடைக்கவில்லை. இப்போதைக்கு கொலையில் சம்பந்தப்பட்ட நபரை "எக்ஸ்" (X) எனக் குறித்துக் கொண்டு அவரைத் தேடிப்பிடிக்கும் நோக்குடனான நீதி விசாரணைகள் முழு விச்சில் நடந்துவருகின்றன. 

ஆய்வுக்கு வேண்டிய உடற்கூறுகள் எடுக்கப்பட்டபின்பு விக்ரோறினின் உடல் அவளது குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டு கடந்த புதன்கிழமை(ஓக்ரோபர் 7)நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. கிராமத்தின் தேவாலயம் ஒன்றில் நடந்த இறுதி ஆராதனையில் வீல்பொந்தன் கிராமமே திரண்டு வந்து அவளுக்கு கண்ணீரஞ்சலி செலுத்தியிருக்கிறது. அதற்கு முன்பாக நடைபெற்ற அனுதாபப் பேரணி ஒன்றில் சுமார் ஆறாயிரம் பேர் வெண்ணிற ஆடை அணிந்து வந்து துயர் ததும்பப் பங்குகொண்ட காட்சி நாடு முழுவதும் பெரும் உணர்ச்சிப் பெருக்கை ஏற்படுத்தியது. 

நாடெங்கும் வைரஸின் வேகத்திற்குச் சமமாக வன்முறைச் சம்பவங்களும் பெருகிவருகின்றன. குற்றச் செயல்கள் நகரங்களில் மட்டுமன்றி கிராமங்களிலும் அதிகரிக்கின்றன. இளம் பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் கடத்தப்படுவது, வல்லுறவுக்குள்ளாக்கப்படுவது, கொலை செய்யப்படுவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. எங்கும் எவருக்கும் பாதுகாப்பற்ற நிலைமை.

இவ்வாறான ஒரு பின்னணியில் நிகழ்ந்திருக்கும் மற்றொரு சம்பவமே இது.
குற்றச் செயல்களால் உருவாகியிருக்கும் "பாதுகாப்பற்ற உணர்வு" (insecurity) என்னும் விடயம் பிரெஞ்சு அரசியலில் ஒரு முக்கிய விவாதப் பொருளாக மாறியிருக்கின்ற இந்த சமயத்தில், விக்ரோறினின் படுகொலை நாடளாவிய கவனத்தை ஈர்த்திருக்கிறது.

படங்கள் :(1)கடைசியாக விக்ரோறின் நடந்து சென்ற காட்டு வழி. (2) துயரில் துவளும் தோழி ஒருத்தி. (3)வெள்ளை அனுதாபப் பேரணியின் ஒரு காட்சி.

நன்றி:
குமாரதாஸன்,
பாரிஸ்.Previous Post Next Post