யாழில் பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 10 மாத ஆண் குழந்தை ஒன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

காய்ச்சலுடன் ஏற்பட்ட வயிற்றுப் போக்கு காரணமாக பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 10 மாத ஆண் குழந்தை நேற்று மதியம் உயிரிழந்துள்ளதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த குழந்தை இளவாலை உயரப்புலம் பகுதியைச் சேர்ந்த திரு திருமதி தனீஸ்வரன் தம்பதிகளின் 10 மாத ஆண் குழந்தையான அக்ஷயன் என பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று முன் தினம் குழந்தைக்கு காய்ச்சலுடன் கூடிய வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குழந்தைக்கு வீட்டில் பரசிடமோல் மாத்திரைகளை வழங்கியுள்ளனர். எனினும் காய்ச்சல் குணம் அடையவில்லை.

இதையடுத்து நேற்று காலை பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு குழந்தை மாற்றப்பட்டிருந்தது. இருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எந்த வகையான காய்ச்சல் காரணமாக குழந்தை உயிரிழந்தது என்பது குறித்து கண்டறியப்படாத நிலையில் குறித்த குழந்தையின் உயிரிழப்புக்கான காரணம் தொடர்பில் இறப்பு விசாரணையினை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற் கொண்டிருந்ததுடன், உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உத்திரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post